Home உலகம் தமிழ்ப்பெண்களை கொடூரமாக தாக்கும் சிங்கள ராணுவ அதிகாரிகள் – புதிய காணொளி காட்சியால் பரபரப்பு

தமிழ்ப்பெண்களை கொடூரமாக தாக்கும் சிங்கள ராணுவ அதிகாரிகள் – புதிய காணொளி காட்சியால் பரபரப்பு

619
0
SHARE
Ad

sri-lanka-aarmy-womenலண்டன், மார்ச் 21 – இலங்கை ராணுவத்தில் பயிற்சி பெறும் தமிழ்ப்பெண்களை சிங்கள ராணுவ அதிகாரிகள் கொடூரமாக தாக்கும் பரபரப்பான காணொளிக் காட்சிகள் வெளியாகியுள்ளன. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்ட போரின் போது சிங்கள ராணுவம் போர் நெறிமுறைகளை மீறி அப்பாவி தமிழர்களை கொன்று குவித்தது.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் மகன் பாலசந்திரனை ராணுவத்தினர் பிடித்து சுட்டுக்கொன்றனர். இதேபோல் விடுதலைப்புலிகளின் ஊடக பிரிவைச்சேர்ந்த இசைப்பிரியாவும் ராணுவத்தினரால் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டார்.

இதுபற்றிய காணொளிக் காட்சிகள் வெளியாகி சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதனால், மனித உரிமைகளை மீறும் வகையில் போர்க்குற்றத்தில் ஈடுபட்ட இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருகிறது.

#TamilSchoolmychoice

இதுதொடர்பாக, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்காவின் சார்பில் 3–வது முறையாக தீர்மானம் கொண்டு வரப்பட்டுவுள்ளது. ஆனால் எந்த நாட்டின் மிரட்டலுக்கும் பணியப் போவதில்லை என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறி வருகிறார்.

இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான புதிய காணொளி ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது. போருக்கு பின் இலங்கை அரசு தனது ராணுவத்தில் தமிழ்ப்பெண்களை சேர்த்து வருகிறது. அவர்களுக்கு அங்குள்ள சிறப்பு முகாம்களில் ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது.

அங்கு பயிற்சி பெறும் தமிழ்ப்பெண்கள் மீது இலங்கை ராணுவத்தினர் இரக்கமற்ற முறையில் கொடூரமாக தாக்கும் காணொளி காட்சிகள் (‘யு டியூப்’) இணையதளத்தில் வெளியாகியுள்ளன. இந்த காணொளிக் காட்சி 4½ நிமிடம் ஓடுகிறது.

பயிற்சி பெறும் தமிழ்ப்பெண்களுக்கு சிங்கள மொழியில் கட்டளையிடப்படுகிறது. உடற்பயிற்சியின் போது சிறு தவறு செய்தாலும் அந்த பெண்கள் தடிகளால் தாக்கப்படும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன.

நிலத்தில் தவழ்ந்து செல்லும் பயிற்சியில் ஈடுபடும் தமிழ்ப்பெண்களை தடிகளுடன் பின் தொடரும் ராணுவ அதிகாரிகள் அவர்களை சரமாரியாக தாக்குகின்றனர்.

இலங்கை ராணுவத்தில் இணைந்துள்ள தமிழ்ப்பெண்களில் பலர் உயர் ராணுவ அதிகாரிகளால் பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கப்படும் கொடுமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தற்போது தமிழ்ப்பெண்கள் கொடூரமாக தாக்கப்படும் காட்சிகள் வெளியாகி இருப்பது பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.