Home உலகம் கிரிமியா விவகாரத்தினால் ரஷியா மீது புதிய பொருளாதாரத் தடைகள் – ஒபாமா அறிவித்தார்.

கிரிமியா விவகாரத்தினால் ரஷியா மீது புதிய பொருளாதாரத் தடைகள் – ஒபாமா அறிவித்தார்.

547
0
SHARE
Ad

NEWS-US-USA-HEALTHCARE-OBAMA-PLANமார்ச் 21 –  உக்ரேன் நாட்டின் கிரிமியா பிரதேசத்தை இணைத்துக் கொண்டுள்ள ரஷியா மீது புதிய தடைகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று மாலை அறிவித்துள்ளார். இதன் மூலம் ரஷியாவுக்கு  மேலும் நெருக்குதல்கள் அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

#TamilSchoolmychoice

ரஷிய அரசாங்க அதிகாரிகள், அரசாங்கத்தில் வகிக்காத சிலர் என 20 பேர்  மீதும் இவர்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு ரஷிய வங்கிக்கும் எதிராக பொருளாதார தடைகளை ஒபாமா விதித்துள்ளார்.

ரஷியப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளை பாதிக்கும் வண்ணம் அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வழிகோலும் அமெரிக்க அதிபரின் ஆணையொன்றிலும் ஒபாமா கையெழுத்திட்டார்.

மேலும் பல பொருளாதாரத் தடைகளையும் ரஷியா எதிர்நோக்க வேண்டியதிருக்கும் என்றும் ஒபாமா எச்சரித்துள்ளார்.

இதற்கு முன்னால் உக்ரேனுடனான தகராற்றில் பங்கு வகித்தவர்கள் என 11 பேரை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்திருந்தது.

ரஷியா செய்துள்ள முடிவுகளினால்தான் இந்த பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் ரஷியாவின் அந்த முடிவுகளை அனைத்துலக நாடுகள் நிராகரித்துள்ளன என்றும் ஒபாமா குறிப்பிட்டார்.

கிரிமியா தீபகற்பப் பிரதேசத்தை வாக்கெடுப்பின் மூலம் தனது நாட்டுப் பிரதேசமாக ரஷியா இணைத்துக் கொள்ள செய்துள்ள முடிவு அனைத்துலக சட்டங்களுக்கு எதிரானது என்றும் அதனால் அந்த இணைப்பை அங்கீகரிக்க முடியாது என்றும் ஒபாமா அறிவித்துள்ளார். 

இந்த நவீன யுகத்தில் நாடுகள் ஒரு பிரதேசத்தை இவ்வாறு இணைத்துக் கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் ஒபாமா உறுதிபடத் தெரிவித்துள்ளார்.