மார்ச் 21 – கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிக நன்றாக இருக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், பிறக்கும் குழந்தைக்கு மூளை தொடர்பான நோய்கள் வராமலும் தவிர்க்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.
லண்டன் மெட்ரோபாலிட்டன் பல்கலைக்கழகமும், அமெரிக்காவின் தேசிய நல்வாழ்வு மையமும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்தன. இது தொடர்பாக 11,875 கர்ப்பிணிப் பெண்களிடம் ஆய்வு நடத்தப்பட்டு இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய பேராசிரியர் ஜேக் வின்க்லெர் கூறுகையில், கர்ப்ப காலத்தில் அதிகமான மீன்கள் உண்ணும் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் மிகுந்த புத்திக் கூர்மையுடன் இருக்கும்.
அந்த சிசுக்கள் வயிற்றில் இருக்கும்போது மூளை தொடர்பான நோய்கள் தாக்குவதும் குறைவாக இருக்கும். குழந்தைகளின் மூளையும் சிறப்பாக வளர்ச்சியடையும்.
கர்ப்பிணிகளாக இருக்கும்போதே ஆரம்பித்து, பிரசவசத்துக்குப் பின் குழந்தைகளிடமும் இந்த ஆய்வு தொடர்ந்தது. அதில், கர்ப்பத்தின்போது மீன்கள் அதிகம் உண்ட தாய்களின் குழந்தைகளின் புத்திக் கூர்மையும், அவர்களது கை-கண் இணைந்து செயல்படுவதும், தகவல் தொடர்பும் மிகச் சிறப்பாக இருப்பது தெரியவந்துள்ளது.
மூளை வளர்ச்சிக்கு முக்கியமான ஒமெகா 3 ஃபெக்ட்டி அமிலம் (omega-3 fatty acids) மீன்களில் அதிகமாக காணப்படுவதே இதற்குக் காரணம்.தாய், சிசுவின் உடலில் ஒமெகா 3 ஃபெக்ட்டி அமில அளவு மிகவும் குறைவாக இருந்தால் குழந்தைகளுக்கு புத்தி மழுங்கவும் வாய்ப்புள்ளது.
32 வார கர்ப்ப காலத்தில் வாரத்துக்கு 340 கிராமுக்குக் குறைவாக மீன் உண்டவர்களின் குழந்தைகளுக்கு புத்திகூர்மை குறைவாகவே இருந்தது. அதிகம் உண்டவர்களின் குழந்தைகள் அகிக ஐ.கியூவுடன் மிக சுட்டியாக உள்ளன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.