லங்காவி : மலேசியர்கள் திமிங்கிலங்களை பாடப் புத்ததகங்களிலும், தொலைக்காட்சிகளிலும்தான் பார்த்திருப்பார்கள். தொலைதூரக் கடல் பகுதிகளில்தான் திமிங்கிலங்கள் காணப்படும் என்ற செய்திகளையும் படித்திருப்பார்கள்.
அவ்வப்போது அபூர்வமாக ஏதாவது ஒரு திமிங்கிலம் உயிருடனோ, இறந்தோ நம் கடல் பகுதியில் காணப்படும்.
ஆனால், மாறிவரும் பருவகால சூழ்நிலைகளுக்கேற்ப திமிங்கிலங்களும் இடம் மாறத் தொடங்கியிருக்கின்றன. நமது லங்காவி கடல் பகுதியில் திமிங்கிலங்கள் கடந்த சில நாட்களாக அடிக்கடி காணப்படுவதாக தகவல்கள் வெளியிடப்படுகின்றன.
திமிங்கிலங்களுக்கு நெத்திலி மீன்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். இப்போதைய காலகட்டத்தில் லங்காவி கடல் பகுதியில் நிறைய அளவில் நெத்திலி மீன்கள் இருப்பதால் அவற்றைத் தேடி திமிங்கிலங்கள் வரத் தொடங்கியுள்ளதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
அதே வேளையில் லங்காவி கடல் பகுதியில் குவிந்திருக்கும் நெகிழிப் (பிளாஸ்டிக்) பொருட்களை திமிங்கிலங்கள் உண்ணும் என்பதால் அவற்றின் உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடிய வாய்ப்பிருப்பதாகவும் கடல் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர்.