பெர்த், மார்ச் 21 – இந்திய கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய துணைக்கோள் கண்டறிந்த இடத்தில், கடந்த இரண்டு நாட்களாக நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் இதுவரை எந்த ஒரு தடயமும் கிடைக்கவில்லை.
ஒருவேளை அந்த பாகங்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் வாரன் திரஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தடயம் எதுவும் கிடைக்காததால் தேடும் பணியில் இருந்த சில விமானங்கள் பெர்த்துக்கு மீண்டும் திரும்பியுள்ளன என்று கூறப்படுகின்றது.
இது குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய துணைப் பிரதமர் வாரென் திரஸ், “கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த பொருள் நீண்ட நேரம் அதே இடத்தில் இருக்காது. அது கடலில் அடியில் மூழ்கியிருக்க வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
எனினும், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த விமானங்கள் இந்த வார இறுதிவரை அந்த குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் பணியை மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“அவசரப்பட்டு அறிவிக்கவில்லை” – ஆஸ்திரேலிய பிரதமர்
ஆஸ்திரேலிய துணைக்கோள் அனுப்பிய படங்களை முன்வைத்து, அது மாயமான மாஸ் MH370 விமானத்தின் பாகமாகத் தான் இருக்கும் என அந்நாட்டு பிரதமர் டோனி அபாட் (படம்) நேற்று நாடாளுமன்றத்தில் அறிவித்தது தற்போது மற்ற நாடுகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
தகுந்த ஆதாரங்கள் கிடைப்பதற்கு முன்பே அவசரப்பட்டு அவர் தன்மூப்பாக அறிவித்துவிட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து இன்று பப்புவா நியூ கினியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டோனி, தேடுதல் வேட்டையில் கண்டறியப்படும் ஒவ்வொரு முன்னேற்றம் குறித்தும் பயணிகளின் குடும்பத்தினருக்கு அறிவிக்க வேண்டியது நமது கடமை என்றும், அதன் காரணமாக தான் நேற்று நாடாளுமன்றத்தில் கூறியதாகவும் தெரிவித்தார்.
அதே வேளையில், பாகங்கள் மிதப்பதாகக் கண்டறியப்பட்ட கடற்பகுதி மிகத் தொலைவான இடம் என்றும், ஒருவேளை அங்கு கடலின் ஆழத்தில் ஏதாவது தடயம் இருப்பதாகத் தெரிந்தால் நிச்சயம் அதை கண்டுபிடிப்போம் என்றும் டோனி கூறினார்.
மிதக்கும் பொருள் கப்பலில் இருந்து விழுந்த கலன்ளின்(Container) பாகங்களாகவும் இருக்கலாம் என்றும் டோனி குறிப்பிட்டார்.
மாயமான மாஸ் விமானத்தில் 239 பயணிகளில், 6 பயணிகள் ஆஸ்திரேலியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.