மார்ச் 22 – இந்தியப் பெருங்கடல் பகுதியில் விமானத்தின் பாகங்கள் மிதப்பதாக ஆஸ்திரேலிய துணைக்கோள் கண்டறிந்த அந்த பொருட்கள் கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்படுவதால், தற்போது மலேசிய அரசாங்கம் அமெரிக்காவின் உதவியை நாடியிருக்கிறது.
மூழ்கியிருக்கலாம் என கருதப்படும் பாகங்களைக் கண்டுபிடிக்க, கடலுக்கடியில் சென்று தேடும் கருவிகளை கொடுக்கும் படி, மலேசிய இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரான ஹிஷாமுடின் ஹுசைன் அமெரிக்காவிற்கு கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஹிஷாமுடினின் தொலைபேசி வழி கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமெரிக்க பாதுகாப்பு மையம் (பெண்டகன்) கோரிக்கையை பரிசீலனை செய்வதாக உறுதியளித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் சக் ஹேகல் கூறுகையில், “கடலுக்கடியில் சென்று கண்கானிக்கும் தொழில்நுட்பத்தின் தயார்நிலை மற்றும் பயன்படுத்தும் நிலை ஆகியவற்றை இராணுவத்துடன் கலந்தாலோசித்த பின்னர் விரைவில் பதிலளிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.