துருக்கி, மார்ச் 24 – துருக்கியில் நட்பு ஊடகமான ‘டுவிட்டர்’ க்கு, அந்நாட்டின் பிரதமர் ரெசெப் தாயிப் எர்டோகன் தடை விதித்துள்ளார். இந்த தடைக்கு அமெரிக்கா உட்பட உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இம்மாதம் 30-ம் தேதி துருக்கியில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ‘டுவிட்டர்’ உட்பட நட்பு ஊடகங்களில், அந்நாட்டின் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் செய்த ஊழல்களை ஆதாரத்துடன் சிலர் அம்பலப்படுத்தி வந்தனர். இதனை தடுக்கும் விதமாக, நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த தடை உத்தரவை, அந்நாட்டின் பிரதமர் பிறப்பித்துள்ளார்.
இந்த தடை குறித்து துருக்கி பிரதமர் எர்டோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடை விதிக்கப்பட்டது குறித்து உலக நாடுகள் கூறும் கருத்துகள் பற்றி தனக்கு கவலை இல்லை என்றும், இதன் மூலம் துருக்கி குடியரசின் வல்லமையை அனைவரும் தெரிந்துக் கொள்வார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலர் ஜே கார்னி, “துருக்கிய அரசாங்கத்தின் இந்த செயல் மக்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்” என்று கூறியுள்ளார்.
ஈரான், பாகிஸ்தான், லிபியா போன்ற நாடுகளில் ஏற்கனவே ‘டுவிட்டர்’ போன்ற நட்பு ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் ‘டுவிட்டர்’ சேவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.