லண்டன், மார்ச் 24 – இலங்கை ராணுவத்தினரின் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச சுதந்திரமான விசாரணை நடத்த இங்கிலாந்து ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் டேவிட் கேமரூன் தெரிவித்துள்ளார். இலங்கையில் கடந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் விடுதலை புலிகளுடனான இறுதி கட்ட போரின் போது,
40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதாக சர்வதேச நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன. இந்நிலையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவிபிள்ளை, இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களை சந்தித்து நிலைமையை கேட்டறிந்தார்.
இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் தேதி ஐ.நா.வில் அறிக்கை சமர்ப்பித்தார். அதில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள், போர் குற்றங்கள் நடந்துள்ளன.
இதுகுறித்து சர்வதேச விசாணை நடத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். இதையடுத்து ஜெனீவாவில் ஐநா மனித உரிமைகள் சர்வதேச மாநாடு நடந்தது.
அப்போது, இலங்கை ராணுவத்தின் போர் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று கோரி அமெரிக்கா தலைமையில் இங்கிலாந்து, வடக்கு அயர்லாந்து, மாண்டினெக்ரோ, மாசிடோனியா உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டுவந்தன.
இந்த தீர்மானத்தை ஆதரித்து ஐநாவில் இங்கிலாந்து ஓட்டளிக்கும் என்று, இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறியுள்ளார். கேமரூன் கூறுகையில்,வரும் வெள்ளிகிழமை அன்று தீர்மானத்துக்கு ஆதரவாக இங்கிலாந்து ஐநாவில் ஓட்டளிக்கும்.
மேலும் இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும். அதற்கான பணிகளை அதிபர் ராஜபக்சே செய்ய தவறிவிட்டார் என்றார்.