Home அரசியல் ஊடுருவலுக்கு இரத்தம் சிந்தாமல் தீர்வு காணப்படும்- நஜிப்

ஊடுருவலுக்கு இரத்தம் சிந்தாமல் தீர்வு காணப்படும்- நஜிப்

705
0
SHARE
Ad

3கோலாலம்பூர், பிப்.15- அரசாங்கம், லாஹாட் டத்துவில் பிலிப்பீனோ கும்பல் ஒன்று ஊடுருவல் செய்துள்ள விவகாரத்துக்கு இரத்தம் சிந்தாமல் அமைதியான முறையில் தீர்வுகாண முயலும் எனப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.

தொடர்ந்து, சாபாவின் கிழக்குக் கரையில் நிலவரம் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக வருணித்த பிரதமர், பேச்சுகள் வழி அவ்விவகாரத்துக்குத் தீர்வுகண்டு சுமார் 100 பேரடங்கிய அக்கும்பல் “அமைதியான முறையில் தென் பிலிப்பீன்சுக்குத் திரும்பிச் செல்வதை” உறுதிப்படுத்துவது முக்கியமாகும் என்றார்.

“உயிர்ச்சேதம் ஏற்படுவதை நாம் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களை அமைதியாகத் திரும்பிப் போகச் சொல்கிறோம்”. நஜிப், இன்று பாப்பாரில் பாடாங் பெக்கானில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

#TamilSchoolmychoice

இராணுவ உடை தரித்த அக்கும்பல் செவ்வாய்கிழமை படகுகளில் லாஹாட் டத்து வந்து சேர்ந்தது. அவர்களைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டிருக்கும் ஆயுதப் படையினர் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டுச் சரண் அடையுமாறு அவர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அங்குள்ள நிலவரம் குறித்து நேற்று போலீஸ் படைத் தலைவர் இஸ்மாயில் ஒமாரும் சாபா போலீஸ் ஆணையர் ஹம்சா தயிப்பும் நஜிப்புக்கு விளக்கம் அளித்தனர்.

போலீசும் இராணுவமும் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டிருப்பதாக நஜிப் கூறினார். “நாம் நினைத்தால் அவர்களைக் கைது செய்ய முடியும். ஆனால், அவர்களுடன் பேச்சு நடத்துவதையும் அவர்கள் அமைதியாக தென் பிலிப்பீன்சுக்குத் திரும்பிச் செல்வதையும்தான் அரசாங்கம் விரும்புகிறது.

“போலீஸ் அவர்களுடன் பேசட்டும். அது வெற்றி அளிக்கும் என்று எதிர்பார்ப்போம். அவர்கள் எங்கும் செல்ல முடியாது. அவர்களைச் சுற்றிலும் சூழ்ந்துகொண்டிருக்கிறோம், ஒரு தீர்வுக்கு வருவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை”, என்றார்.

அக்கும்பல் ஆயுதங்கள் வைத்துள்ளதா என்று வினவியதற்கு போலீஸ் அதை அறியும் என்றும் அது பற்றி “ஊகங்கள் செய்ய வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டார்.

“இரகசிய தகவல்களை வெளியிடுவதற்கில்லைபோலீஸ் இடையூறின்றி அவர்களின் பணியைச் செய்யட்டும். இரத்தம் சிந்தாமல் விவகாரத்துக்குத் தீர்வு காணப்பட வேண்டும். அதுதான் முக்கியம்”, என்றார். இச்சம்பவம் பற்றி பிலிப்பீன்ஸ் அரசாங்கத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் சொன்னார்.