மார்ச் 25 – விமானம் காணாமல் போன தினத்திலிருந்து இடைவிடாது தொடர்ந்த தேடுதல் வேட்டை இன்று நிறுத்தப்பட்டுள்ளது. விமானம் விழுந்ததாகக் கூறப்படும் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தேடுதல் வேட்டை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கடல் பகுதியில் பலமான காற்று வீசுவதாலும், அதிகமான மேகமூட்டங்களினால் பார்க்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளதாலும் தேடுதல் வேட்டை நிறுத்தப்பட்டுள்ளன. கடல் சீற்றமும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அலைகள் 4 மீட்டர் உயரம் வரை அடிப்பதாகவும், மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.
ஆபத்தான இந்த சூழ்நிலையில் தேடுதல் வேட்டையைத் தொடர முடியாது என்று ஆஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது.
மலேசியா ஆதாரங்களை ஒப்படைக்க வேண்டும்
இதற்கிடையில், பிரதமர் நஜிப்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, காணாமல் போன விமானம் தொடர்பாக தங்கள் வசம் உள்ள அனைத்து ஆதாரங்களையும் ஒப்படைக்குமாறு சீன அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
விமானத்தில் இருந்த பயணிகளின் உறவினர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் மலேசிய அரசாங்கமும், இராணுவமும் தொடர்ந்து தகவல்களை மூடி மறைப்பதாகவும், உண்மையான தகவல்களைக் கூறவில்லை என்றும் ஆத்திரத்துடன் சாடியுள்ளனர்.
‘இம்மார்சாட்’ (Immarsat) எனப்படும் பிரிட்டனின் துணைக்கோள நிறுவனம் ஒன்று எடுத்து வெளியிட்ட படங்களின் அடிப்படையிலேயே விமானத்தின் பயணம் இந்தியப் பெருங்கடலில் முடிவுக்கு வந்தது என்றும், யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் பிரதமர் அறிவித்துள்ளார் என்றும் தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விமானத்தின் எரிபொருள் தீர்ந்திருக்கும் என்ற அடிப்படையிலும் குறிப்பிட்ட இடத்தில் விமானம் விழுந்திருக்கும் என்ற முடிவுக்கு புலனாய்வாளர்கள் வந்துள்ளனர்.
ஆனால், இதுவரை எந்த பொருட்களும் கடல் பகுதியில் இருந்து மீட்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.