கோலாலம்பூர், மார்ச் 26 – MH370 விமானம் மாயமாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே பொருளாதார நெருக்கடியில் இருந்த மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், தற்போது உள்ள இக்கட்டான சூழ்நிலையில், எதிர்காலமே கேள்விக் குறியாகி நிற்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
விபத்திற்குள்ளான விமானம் கிடைக்காத பட்சத்தில் பயணிகளின் குடும்பத்தாருக்கு பல மில்லியன் டாலர் இழப்பீட்டுத் தொகை தர வேண்டிய கட்டாய சூழ்நிலையில் மாஸ் நிறுவனம் உள்ளது. காப்பீடு மூலமாகக் கிடைக்கும் நிதி ஓரளவிற்கு உதவும் என்று கருதினாலும், விமானத்தில் அசம்பாவிதம் நடந்துள்ளதாகக் கண்டறியப்பட்டால், பயணிகளின் உறவினர்கள் வழக்குத் தொடுத்து இன்னும் கூடுதலாக நஷ்ட ஈடு பெறவும் சட்டத்தில் இடம் உள்ளது.
இந்நிலையில், மாஸ் நிறுவனத்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கையும் இந்த மூன்று வாரங்களில் பல மடங்கு சரிவடைந்துள்ளதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
மலேசிய அரசாங்கத்தின் சொத்து நிதியில் 70 சதவிகிதப் பங்கைக் கொண்டுள்ள மாஸ் நிறுவனம், கடைசியாக லாபம் அடைந்தது 2010 ஆம் ஆண்டு என்று அறிக்கை கூறுகின்றது.
அண்மையில், மாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, 2012 ஆம் ஆண்டிற்கான முழு ஆண்டு மொத்த இழப்பு 432.58 மில்லியன் ரிங்கிட்டில் இருந்து 1.17 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரித்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளின் குடும்பத்திற்கு முதற்கட்ட இழப்பீடு
விபத்திற்குள்ளானதாகக் கருதப்படும் MH370 விமானத்தில் பயணம் செய்த 239 பேருக்கும், தலா 5000 டாலர் (16,502 ரிங்கிட்) முதற்கட்ட இழைப்பீடு அவர்களின் உறவினர்களிடம் வழங்கப்பட்டும் என மாஸ் நிறுவனம் நேற்று அறிவித்தது. அதே நேரத்தில் கடலுக்குள் விழுந்த விமானம் கண்டறியப்பட்டால், உறவினர்களை ஆஸ்திரேலியா பெர்த்துக்கு அழைத்துச் சென்று மீட்கப்பட்ட தடயங்களை காட்டுவதாகவும் மாஸ் உறுதியளித்துள்ளது.
தேடுதல் பணிக்குத் தேவையான அத்தனை செலவுகளையும் மலேசிய அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஏர் பிரான்ஸ் விமானம் விபத்திற்குள்ளாகி, அதை தேடி உண்மை நிலவரத்தை கண்டறிய சுமார் இரண்டு வருடங்கள் தேவைப்பட்டது. அதற்கு ஆன மொத்த செலவு 32 மில்லியன் ஈரோ (145 மில்லியன் ரிங்கிட்) ஆகும்.
ஆனால் அதை விட இன்னும் கூடுதலான நிதி MH370 விமானத்தை கண்டறிவதற்கு செலவிடப்படலாம் என்பது நிபுணர்களின் கருத்தாகும்.
விமானம் கண்டுபிடிக்கப்படாமல் போனால், அனைத்துலக ஒப்பந்தத்தின் படி, உயிரிழந்த பயணிகள் ஒவ்வொருவருக்கும் தலா 175,000 அமெரிக்க டாலர் (5,78,025 ரிங்கிட்) வரையில் அவர்களின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டிய பொறுப்பையும் மாஸ் விமானம் நிறுவனம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகின்றது.
எனினும், மாஸ் நிறுவனத்திற்கு விமானத்தின் காப்பீடு மூலமாக எவ்வளவு நிதி கிடைக்கும் என்ற முழு விபரம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் வழக்கமாக போயிங் 777 விமானத்திற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் வரை கிடைக்கும் என்று கருதப்படுகின்றது.
மாஸ் நிறுவனத்தின் பயண அனுபவங்கள் இதுவரை (MH370 க்கு முன்பு வரை) நல்ல நிலையிலேயே இருந்துள்ள காரணத்தால், இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள, தனது பயணச் சீட்டுக்களின் விலையை மிகக் குறைவாக மாற்றி, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்க முயற்சி செய்யும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.