கோலாலம்பூர், ஏப்ரல் 1 – மாயமான மலேசிய விமானம் MH370 விவகாரத்தை, அரசு கையாளும் விதத்தில் பெரும்பாலான மலேசியர்கள் தங்களது அதிருப்தியைத் தெரிவித்துள்ளனர்.
மெர்டேக்கா மையம் நடத்திய இந்த கருத்துக் கணிப்பில், 50 சதவிகித மக்கள் அதிருப்தியையும், 43 சதவிகித மக்கள் திருப்தியையும் தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச்13 ஆம் தேதியில் இருந்து மார்ச் 20 ஆம் தேதி வரை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், 513 பேரிடம் கேள்வி கேட்கப்பட்டது.
எனினும், அரசாங்கம் இவ்விவகாரத்தை கையாளும் விதம் குறித்த பதில், இனத்தைப் பொறுத்து வேறுபடுவதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
சீனர்களில் 74 சதவிகிதமும், இந்தியர்களில் 59 சதவிகிதமும், மலாய்காரர்களில் 30 சதவிகிதமும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
அதே வேளையில், சீனர்களில் 18 சதவிகிதமும், இந்தியர்களில் 36 சதவிகிதமும், மலாய்காரர்களில் 63 சதவிகிதமும் அரசாங்கம் விவகாரத்தை கையாளும் விதத்தில் திருப்தி தெரிவித்துள்ளனர்.
இதே மெர்டேக்கா மையம் பிரதமர் நஜிப்பின் தலைமை பற்றி நடத்திய மற்றொரு கருத்துக்கணிப்பில் அதிகளவு மக்கள் அதிருப்தி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.