Home இந்தியா இந்தியத் தேர்தல்: கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 3 – திருநாவுக்கரசருக்கு திரும்புமா வசந்த காலம்? இராமநாதபுரம்...

இந்தியத் தேர்தல்: கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 3 – திருநாவுக்கரசருக்கு திரும்புமா வசந்த காலம்? இராமநாதபுரம் கைகொடுக்குமா?

636
0
SHARE
Ad

Thirunavukkarasar 300 x200ஏப்ரல் 3 – எம்.ஜி.ஆரின் ஆட்சிக் காலத்தில் அவரைக் கவர்ந்து, தமிழ் நாட்டில் மிக இளம் வயதிலேயே (28 வயதில்) சட்டமன்ற அவையின் துணைத் தலைவர், 1980 முதல் 1987 வரை தமிழக அமைச்சர் என்றெல்லாம் பல பெருமைகளை தனதாக்கிக் கொண்டவர் அதிமுகவில் முக்கிய பிரமுகராக உருவெடுத்தவர் – எஸ்.எஸ்.திருநாவுக்கரசு.

#TamilSchoolmychoice

இன்று திருநாவுக்கரசர்!

எல்லோரையும் மனம் மாற்றி அலைக்கழிக்கும் ஜோதிடங்களும், எண் கணிதங்களும், பெயர் மாற்றங்களும் அரசியல்வாதிகளை மட்டும் விட்டு வைத்து விடுமா என்ன?

திருநாவுக்கரசு  என்ற பெயரில் எம்.ஜி.ஆர் காலத்தில் தமிழக அரசியலில் முத்திரை பதித்தவர், புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு எதிர்ப்பான நிலையெடுத்து அதனால் கொஞ்ச காலம் அரசியலில் காணாமல் போனார்.

பின்னர் ஒரு தமிழ்ப்படத்தில் காவல் துறை அதிகாரியாக – கதாநாயகனாக நடித்தும் மிரட்டினார்!

எம்ஜிஆர்-அதிமுக என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை கொஞ்ச காலம் நடத்திவிட்டு, 2002ஆம் ஆண்டில் அந்தக் கட்சியைக் கலைத்து விட்டு பாரதீய ஜனதாவுடன் இணைந்தார்.

பாஜகவின் ஆட்சிக் காலத்தில் மத்திய அமைச்சரவையிலும் கொஞ்ச காலம் துணையமைச்சராக இருந்தார். நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்தார்.

இடைப்பட்ட காலத்தில் திருநாவுக்கரசு என்ற பெயரை திருநாவுக்கரசர் என்றும் மாற்றிக் கொண்டார். ஆனாலும், பெயர் மாற்ற ஜாதகம் இன்னும் வேலை செய்த மாதிரி தெரியவில்லை.

பாரதீய ஜனதாவில் பிரச்சனை ஏற்பட்டு அங்கிருந்து 2009 முதல் காங்கிரசில் வந்து சேர்ந்து ஐக்கியமாகி விட்டார். இந்த தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுகின்றார்.

Thiru joins Congress 440 x 215(2009இல் காங்கிரசில் இணைத்துக் கொண்டபோது)

மக்கள் செல்வாக்கு கொண்டவர்

1977ஆம் ஆண்டில் 27வது வயதில் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் வென்று தமிழக சட்டமன்றத்தில் நுழைந்தவர். தொடர்ந்து பல தவணைகள் அந்த தொகுதியில் வென்றவர்.

அந்த தொகுதியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், புதுக்கோட்டை, இராமநாதபுரம் பகுதிகளிலும் தனக்கென தனிப்பட்ட செல்வாக்கை வளர்த்துக் கொண்டவர்.

Thiru with Kalaingar 440 x 215(கலைஞர் மு.கருணாநிதியுடன்)

அந்தப் பகுதிகளிலும் யார் வீட்டுக் கல்யாணம் என்றாலும், அழைப்பு வந்தால், தவறாது கலந்து கொள்வது, கலந்து கொள்ளாவிட்டாலும் மணமக்களுக்கு முறையான அன்பளிப்பை வழங்கி விடுவது என்ற பழக்கத்தைத் தவறாது அவர் பின்பற்றி வருவதாகவும் அதனால்தான் அவருக்கு இவ்வளவு பெரிய செல்வாக்கு என்றும் கூறுவார்கள்.

இராமநாதபுரம் தொகுதியில் அவரது ஜாதி வாக்காளர்கள் அதிகம் என்பது இந்த தேர்தலில் அவருக்கு சாதகமான மற்றொரு விஷயம்.

எம்.ஜி.ஆர் 1977ஆம் ஆண்டில் முதன் முதலாக ஆட்சியில் அமர்ந்தபோது அவரோடு சேர்ந்து அறந்தாங்கியில் சட்டமன்ற உறுப்பினராக வென்றவர் என்ற சிறப்பைக் கொண்டவர் திருநாவுக்கரசர். எம்.ஏ. பட்டம் பெற்றவர் என்பதோடு சட்டத்துறையிலும் பட்டதாரி.

எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்த இளைய தலைவர்களுள் ஒருவர் என்பதால் எம்.ஜி.ஆர் அவருக்கு சட்டமன்ற அவைத் துணைத் தலைவர், பின்னர் அமைச்சர் என்றெல்லாம் பதவிகள் கொடுத்து அழகு பார்த்தார்.

பின்னர் ஜெயலலிதாவுடன் ஒத்துப் போக முடியாமல் திருநாவுக்கரசர் அதிமுகவிலிருந்து வெளியேறினார்.

எம்.ஜி.ஆரின் தீவிர ஆதரவாளர், பழைய அதிமுக-காரர் என்ற முத்திரைகளைக்  கொண்டவர் என்பதால் தொகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் விசுவாசிகளின் வாக்குகளையும் கொஞ்சம் அள்ளும் வாய்ப்பு அவருக்கு இருக்கின்றது.

காங்கிரசிற்கு எதிரான அலையிலிருந்து மீள்வாரா?

ஆனால் இந்த முறை வெல்வதற்கு இவையெல்லாம் மட்டும் போதுமா?

என்றுமில்லாத அளவுக்கு காங்கிரசுக்கு எதிர்ப்பான அலை வீசுகின்ற இந்த தேர்தலில், எல்லாக் கட்சிகளும் தனித்தனியாக மோதிப் பார்க்கும் சூழலில், திருநாவுக்கரசர், தனது தனிப்பட்ட செல்வாக்கின் மூலம்தான் இராமநாதபுரத்தில் வெல்ல முடியும், காங்கிரசின் கட்சி பலத்தால் அல்ல!

ஆளுங்கட்சியான அதிமுகவின் பலம், காங்கிரசில் எப்போதும் தொடரும் உட்கட்சிப் போராட்டங்கள், இலங்கைப் பிரச்சனையால் தமிழ்நாட்டு மக்களின் காங்கிரஸ் எதிர்ப்பு இவையெல்லாம் திருநாவுக்கரசர் இராமநாதபுரத்தில் தோல்வி அடைந்தால் இப்போதே, முன்கூட்டியே நாம் எழுதி வைத்துக் கொள்ளக் கூடிய காரணங்கள்.

இவை எல்லாவற்றையும் மீறி தனது தனிப்பட்ட செல்வாக்கால், தனக்கு எதிரான அரசியல் அலைகளைச் சமாளித்து, இராமநாதபுரத்தில் வென்று மீண்டும்  அரசியலில் ஒரு சுற்று வருவாரா திருநாவுக்கரசர் என்ற கேள்வி எழுந்துள்ளதால், தமிழ்நாட்டு அரசியல் விமர்சகர்களால் கவனிக்கப்படும் வேட்பாளராகளில் ஒருவராக திருநாவுக்கரசர் மாறியுள்ளார். 

பெயர் மாற்றம் அவருக்குக் கைகொடுக்குமா? அல்லது கைதான் கைதூக்கி விடுமா?

பொறுத்திருந்து பார்ப்போம்!

-இரா.முத்தரசன்

 

(விரைவில் நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் அகில இந்திய அளவிலும், தமிழ் நாட்டிலும் பல வேட்பாளர்கள் பல்வேறு காரணங்களால் கவனிக்கப்படும் வேட்பாளர்களாகியுள்ளனர். அவர்களைப் பற்றிய பாரபட்சமற்ற, நடுநிலையான கண்ணோட்ட வரிசை இது. அடுத்தடுத்து மற்ற வேட்பாளர்கள் இடம் பெறுவார்கள்)