Home இந்தியா காங்கிரசால் கழற்றி விடப்பட்ட திருநாவுக்கரசு

காங்கிரசால் கழற்றி விடப்பட்ட திருநாவுக்கரசு

299
0
SHARE
Ad
திருநாவுக்கரசர்

சென்னை :  எம்ஜிஆர் காலத்தில் அதிமுகவில் தீவிரமாக ஈடுபட்டு, அமைச்சராகவும் சட்டமன்ற அவைத் தலைவராகவும் பதவி வகித்தவர் திருநாவுக்கரசு.  பின்னர் ஜெயலலிதாவுடன் கருத்து முரண்பாடு கொண்டு அதிமுகவில் இருந்து விலகி தனிக் கட்சி கண்டவர், கட்சியைக் கலைத்து விட்டு பாஜகவில் இணைந்தார். வாஜ்பாய் அமைச்சரவையில் இணை அமைச்சராகவும் இருந்தார்.

பின்னர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்த அவருக்கு 2019 பொதுத் தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்றம் ஒதுக்கப்பட்டது. போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

இந்த முறை திருச்சி நாடாளுமன்றம் வைகோவின் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு, அங்கு வைகோ மகன் துரை வைகோ போட்டியிடுகிறார்.

#TamilSchoolmychoice

திருநாவுக்கரசுவுக்கு வேறு தொகுதி ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், காங்கிரஸ் தமிழ் நாட்டில் போட்டியிடும் 9 தொகுதிகளில் 8 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவித்தார்.

அந்தப் பட்டியலில் மயிலாடுதுறை விடுபட்டிருந்தது. அங்கு திருநாவுக்கரசு போட்டியிடலாம் என்ற ஆரூடங்களும் இதனால் எழுந்தன.

இந்நிலையில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா போட்டியிட உள்ளதாக அக்கட்சித் தலைமை அறிவித்துள்ளது. இவர் சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி வருபவர் ஆர். சுதா. தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவியாகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மாணவப் பருவத்தில் இருந்தே காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் மிக நீண்ட காலமாக இருந்து வருகிறார்.

அவர் போட்டியிடுவதைத் தொடர்ந்து திருநாவுக்கரசுவுக்கு இந்த முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.