Home அவசியம் படிக்க வேண்டியவை இந்தியத் தேர்தல்: கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 4 – முத்தத்தால் பிரபலமான நக்மா – மீருட்...

இந்தியத் தேர்தல்: கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 4 – முத்தத்தால் பிரபலமான நக்மா – மீருட் தொகுதியை மீட்பாரா?

1777
0
SHARE
Ad

Nagma 300 x 200ஏப்ரல் 4 – தேர்தல் களத்தில் பிரச்சாரச் சத்தங்களால் சில வேட்பாளர்கள் பிரபலமாவதுண்டு. ஆனால் முத்தங்களால் பிரபலமாகியுள்ள கிளுகிளுப்பான வேட்பாளர் முன்னாள் நடிகை நக்மா!

#TamilSchoolmychoice

காங்கிரசின் வேட்பாளராக, உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீருட் தொகுதியில் களமிறக்கப்பட்டுள்ளார் நக்மா.

முத்த சர்ச்சை

வேட்பு மனுத் தாக்கலின் போதே காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் நக்மாவுக்கு முத்தம் கொடுத்து வரவேற்றதைப் பத்திரிக்கைகள் பெரிதுபடுத்த,‘அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்பது போல அதை ஒரு சாதாரண விஷயமாக ஒதுக்கித் தள்ளினார் நக்மா. ஆனால் அந்தக் காட்சியை இந்தியத் தொலைக்காட்சிகள் எல்லா மொழிகளிலும் திரும்பத் திரும்ப ஒளிபரப்பின.

ஆனால், அடுத்த சில நாட்களில் நடந்த பிரச்சாரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் நக்மாவுடன் சில்மிஷம் பண்ண முனைய அவரை பளாரென்று அறை விட்டு மீண்டும் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தார் நக்மா.

பலம் வாய்ந்த வேட்பாளரா, மீருட் தொகுதியில் அவரால் வெல்ல முடியுமா என்பது போன்ற அரசியல் ஆராய்ச்சிகளைத் தாண்டி, இது போன்ற கிளுகிளுப்பான சமாச்சாரங்களால் அகில இந்திய அளவில் சில நாட்களிலேயே கவனிக்கப்படும் வேட்பாளராக மாறி விட்டார் 39 வயதான முன்னாள் நடிகை நக்மா.

தற்போது இவருக்குக் கூடுதல் பாதுகாப்பு தரவேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கும் அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளதென்றால் எந்த அளவுக்கு மீருட் தொகுதியில் நக்மாவுக்குக் கூட்டம் கூடுகின்றது என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

அந்தத் தொகுதியில் வென்று காட்டுவாரா என்பது வேறு விஷயம்!

நக்மாவின் தந்தை இந்துவாக இருந்தாலும், அவரது தாயார் ஒரு முஸ்லீம் என்பதால், இந்தத் தொகுதியில் உள்ள முஸ்லீம் வாக்காளர்களையும் நக்மாவால் கவர முடியும் என்பது காங்கிரசாரின் வியூகத் திட்டம்.

சினிமாவில் கொடி கட்டிப் பறந்தவர்

Badsha Rajni Nagma 440 x 215தமிழ்ப் பட ரசிகர்களாலும், ஏன் ரஜினிகாந்தாலும் கூட மறக்க முடியாத படம் பாட்ஷா. “இதுதான் என் சினிமா வாழ்க்கையில் வசூலிலுல், ரசிகர்கள் தந்த ஆதரவிலும் உச்சகட்ட படம் என அப்போது நான் நினைத்திருந்தேன்” என ரஜினி ஒரு முறை கூறிய அந்தப் படத்தில் அவரோடு ஜோடி சேர்ந்தவர் நக்மா.

பல தமிழ்ப் படங்களில் கதாநாயகியாக வலம் வந்த நக்மா, பிரபுதேவா முதல் சரத்குமார் வரை பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். பின்னர் கொஞ்ச காலம் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியுடன் சுற்றித் திரிந்தார்.

இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்துப் புகழ் பெற்ற நக்மா பின்னர் வாய்ப்புகள் குறைய, வட இந்திய போஜ்புரி மொழிப் படங்களில் கவர்ச்சியாகத் தோன்றி நடித்தார். யூ டியூப் என்ற காணொளி இணையப் பக்கம் போனால், அவர் கவர்ச்சித் தோரணம் கட்டி ஆடிய படங்களின் காட்சிகளை – பாடல்களைப் பார்க்கலாம்.

இந்த சினிமா பின்னணிக் காரணங்களால் நக்மா உத்தரப் பிரதேசத்தின் மீருட் தொகுதியில் வெற்றிவாகை சூடலாம் – காங்கிரசுக்கு அந்த தொகுதியை வென்று தரலாம் என்ற எதிர்பார்ப்பு கூடியிருக்கின்றது.

Nagma Jothika 300 x 200(தங்கை ஜோதிகாவின் திருமணத்தின்போது)

நடிகர் சூர்யாவின் மனைவியும் முன்னாள் நடிகையுமான ஜோதிகா, நக்மாவுக்கு தங்கை முறையாவார்.

இடைப்பட்ட காலத்தில் அழகு சாதன நிலையமொன்றை மும்பாயில் நிறுவி வணிக முயற்சிகளிலும் ஈடுபட்டவர் நக்மா.

அரசியல் பிரவேசம்

பின்னர் ராஜீவ் காந்தியின் அரசியலால் கவரப்பட்டு மதச் சார்பற்ற காங்கிரஸ் கட்சியில் சேர்வதாக நக்மா அறிவித்தார். தொடர்ந்து காங்கிரசின் பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு அந்தக் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார்.

2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலேயே தொகுதி ஒன்றில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டவர் நக்மா.

ஆனால், இந்த தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளது.

மீருட் தொகுதியை காங்கிரசுக்கு மீட்டுத் தருவாரா நக்மா?

மீட்டுத் தராவிட்டாலும், தேர்தல் முடியும் வரை தலைப்புச் செய்திகளில் தொடர்ந்து இடம் பெறும் – அனைவராலும் கவனிக்கப்படும் வேட்பாளராக நக்மா உலா வந்து கொண்டிருப்பார்.

-இரா.முத்தரசன்