Home உலகம் அமெரிக்காவில் 3 பேரை சுட்டுக் கொன்று ராணுவ வீரர் தற்கொலை!

அமெரிக்காவில் 3 பேரை சுட்டுக் கொன்று ராணுவ வீரர் தற்கொலை!

804
0
SHARE
Ad

Ford hoodபோர்ட் ஹுட், ஏப்ரல் 4 – அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள போர்ட் ஹூட் இராணுவத் தளத்தில் இருக்கும் மருத்துவப் பிரிவு அலுவலகம் மற்றும் போக்குவரத்து படைப்பிரிவு அலுவலகம் ஆகியவற்றின் மீது இவான் லோபஸ் என்ற இராணுவ வீரர் நடத்திய திடீர் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டிற்குப் பிறகு அந்த வீரர் தனது தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இவான் லோபஸ் ஈராக் போரில் பங்கேற்றவர் ஆவார்.

இது குறித்து அமெரிக்க ராணுவ உயரதிகாரி மார்க் மில்லி கூறுகையில்,

#TamilSchoolmychoice

“இவான் லோபஸ் நடத்திய இந்த திடீர் தாக்குதலையடுத்து, அங்கிருந்த ராணுவ காவல்துறை அதிகாரி ஒருவர் அவரைத் தடுத்து நிறுத்தவே, தனது தலையில் துப்பாக்கியால் சுட்டு அவர் தற்கொலை செய்து கொண்டார்”

“ஈராக் போரின் போது கடந்த 2011ஆம் ஆண்டு அமெரிக்கா படைப்பிரிவில் லோபஸ் 4 மாதங்கள் பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து டெக்சாஸில் உள்ள மற்றொரு ராணுவ தளத்துக்கு அவர் பணிமாற்றம் செய்யப்பட்டார். கடந்த பிப்ரவரி மாதம் தான், போர்ட் ஹுட் ராணுவ தளத்துக்கு லோபஸ் வந்தார்.”

“ஈராக் போரில் பங்கேற்று விட்டு, நாடு திரும்பியதில் இருந்து லோபஸ் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றிருக்கலாம் என கருதுகிறோம்.தீவிரவாதத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தொடர்பிருக்குமா? என்பது குறித்து தற்போதைக்கு தெரிவிக்க இயலாது.”

“தாக்குதலின் போது லோபஸ், .45 ரக தானியங்கி துப்பாக்கியை கொண்டு வந்தார். அதனை உள்ளூர் சந்தையில் அவர் வாங்கியுள்ளார். அதுகுறித்து ராணுவ தளத்தில் அவர் பதிவு செய்யவில்லை” என்று மார்க் மில்லி தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து மற்றொரு ராணுவ அதிகாரி தெரிவிக்கையில், “தாக்குதலின்போது லோபஸ் போருக்கு செல்லும் போது அணியும் சீருடையை அணிந்து வந்திருந்தார். இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து மூடப்பட்ட போர்ட் ஹுட் ராணுவ தளம், 5 மணி நேரத்துக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது’ என்றார்.

இதற்கு முன்பு கடந்த 2009ஆம் ஆண்டு, போர்ட் ஹுட் ராணுவ தளத்தில் ராணுவ மருத்துவ அதிகாரி நிடல் ஹாசன் என்பவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 13 பேர் பலியாகினர். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை முடிந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தான், நிடல் ஹாசனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் போர்ட் ஹுட் ராணுவ தளத்தில் 2வது முறையாக துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றிருப்பது, அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.