போர்ட் ஹுட், ஏப்ரல் 4 – அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள போர்ட் ஹுட் இராணுவத் தளத்தில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை நினைத்து மிகவும் கவலையடைந்திருப்பதாக அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிகாக்கோவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய ஒபாமா, “இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றோம். என்ன நடந்தது என்பதை அடிமட்டம் வரையில் சென்று விசாரணை நடத்தி உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டும். 5 வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் ஏற்படுத்திய அதே வலியை இந்த சம்பவமும் ஏற்படுத்தி விட்டது” என்று தெரிவித்துள்ளார்.
ஈராக் போரில் பணியாற்றிய இராணுவ வீரர் இவான் லோபஸ் என்பவர் நேற்று திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 3 பேர் பலியாயினர். 16 பேர் படுகாயமடைந்துள்ளனர். துப்பாக்கி சுட்டு சம்பவத்தை தொடர்ந்து அந்த வீரர் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, இதே போர்ட்ஹுட் இராணுவத் தளத்தில் நடந்த துப்பாகிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் படுகாயமடைந்தனர் என்பதை ஒபாமா நினைவு கூர்ந்தார்.