ஏப்ரல் 4 – ராயபுரம் குப்பத்தை சேர்ந்த பீட்டருக்கு, வெள்ள வெளேர்ணு ‘நெய் குழந்தை’ ஹன்சிகா மாதிரி ஒரு பொண்ணு கிடைச்சா என்ன பண்ணுவான்? அவன் ‘மான் கராத்தே’யும் போடுவான். ஏன்.. மல்யுத்த வீரனா கூட மாறுவான்.
ஒரு வரியில சொல்லணும்னா “கன்னியர் கடைக்கண் காட்டிவிட்டால் மண்ணின் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம்” என்ற பழைய பாவேந்தர் பாடல் தான் ‘மான் கராத்தே’ படத்தோட கதை.
பீட்டரா சிவ கார்த்திகேயன், யாழினியா ஹன்சிகா, கில்லர் பீட்டரா (வில்லன்) வம்ஸி கிருஷ்ணா, சூரி, சதீஸ், சிவா என கலகல கூட்டணியோடு, படம் முழுக்க காமெடி வசனங்களை தூவி இரண்டரை மணி நேரம் இரசிகர்களை சிரிக்க வச்சு வீட்டுக்கு அனுப்புற படம் தான் ‘மான் கராத்தே’.
ஏஆர்.முருகதாஸ் கதையை, திருக்குமரன் இயக்க, சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, அதற்கு இசை கோர்த்திருக்கிறார் அனிருத்.
சிவ கார்த்திகேயன், அனிருத் கூட்டணியில் ஏற்கனவே வெளிவந்த ‘எதிர்நீச்சல்’ படத்தைப் போன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட கதைக் கருவாக இருந்தாலும், ‘பாக்ஸிங்’ என்ற வேறு ஒரு களத்தில் கதையை சொல்லியிருக்கும் விதத்தில் கவர்ந்திருக்கிறார் இயக்குநர்.
பாக்ஸிங்? சிவகார்த்திகேயன் இருக்குற உடம்புக்கு அவருக்கு குத்து சண்டை வீரர் மாதிரி கதாப்பாத்திரமெல்லாம் பொருந்துமா? என்ற உங்களின் கேள்வி புரிகிறது. படம் பார்த்தீர்கள் என்றால் அவரை நிச்சயம் ஏற்றுக் கொள்வீர்கள்.
சும்மா உடம்ப கல்லுமாதிரி வச்சுருக்குற வில்லனுக்கும், வத்தலும் தொத்தலுமா இருக்குற சிவகார்த்திகேயனுக்கும் படத்தின் இறுதிக் காட்சியில குத்து சண்டை போட்டி நடக்கும். பேஸ்புக், டிவிட்டர்ல 88 சதவிகிதம் பேர் சிவகார்த்திகேயன் தான் ஜெயிப்பாருன்னு சொல்லுவாங்க அது எப்படி? அது தான் ‘மான் கராத்தே’ டெக்னிக்…
அதே போல், ஹீரோவுக்கும், வில்லனுக்கும் ஒரே மாதிரி பெயர் இருக்கும் வித்தியாசமான படங்களில் ‘மான் கராத்தே’ யும் ஒன்று. காரணம் அந்த பெயரை வைத்து தான் கதை நகர்கின்றது. அதில் தான் சுவாரஸ்யமும் அடங்கி இருக்கின்றது.
‘மான் கராத்தே’ பீட்டராக சிவ கார்த்திகேயன் நடிப்பில் பட்டைய கிளப்பி இருக்கிறார். ஆரம்பத்தில் அட்டைகத்தியாக இருந்து கடைசியில் வெட்டுக்கத்தியாக மாறும் நடிப்பிலும், அதை வெளிப்படுத்தும் முகபாவனைகளிலும் மீண்டும் ஒரு முறை தனது திறமையை நிரூபித்திருக்கிறார்.
விறுவிறு திரைக்கதையும், அனிருத்தின் பின்னணி இசையும், சிவ கார்த்திகேயனின் நடன அசைவுகளும், சதீஸின் காமெடி பஞ்ச்களும் ரசிக்க வைக்கின்றன.
ஏற்கனவே பெண்களையும், குழந்தைகளையும் கவர்ந்து விட்ட சிவகார்த்திகேயனுக்கு ‘மான் கராத்தே’ இன்னொரு மாபெரும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை.
படத்தில் பல இடங்களில் சுவாரஸ்யங்கள் நிறைந்து இருப்பதால், கதைச் சுருக்கத்தை மட்டுமே சொல்ல முடியும்.
சுற்றுலா போகும் ஐந்து பிரபல ஐ.டி நிறுவனத்தைச் சேர்ந்த நண்பர்கள், காட்டில் ஒரு சித்தரை சந்திக்கிறார்கள். எதிர்காலத்தை கணிக்கக் கூடிய ஆற்றல் கொண்ட அந்த சித்தர், உண்மையில் சக்தி வாய்ந்தவரா என்பதை சோதிக்க, ஐந்து பேரும் தங்களது கைப்பேசியில் ஆளுக்கு ஒரு வரம் கேட்டு எழுதி சித்தர் முன் வைக்கிறார்கள். அதில் சதீஸ் கேட்ட வரத்தை சித்தர் தேர்வு செய்கிறார். .அங்கு தான் தொடங்குகிறது ‘மான் கராத்தே’ படத்தின் கதை.
சதீஸ் கேட்ட வரம் என்ன? சித்தர் கொடுத்தாரா? ராயபுரத்தில் இருக்கும் பீட்டருக்கும், இந்த ஐந்து பேருக்கும் இடையே என்ன தொடர்பு? ‘பாக்ஸிங்’ என்ற பெயருக்கே அர்த்தம் தெரியாத ராயபுரம் பீட்டர் ‘மான் கராத்தே’ பீட்டரானது எப்படி? போன்ற அத்தனை கேள்விகளில் தான் படத்தின் சுவாரஸ்யம் அடங்கி இருக்கின்றது.
படத்தில் நடிப்பு என்றால் அதில் முதலில் சிவகார்த்திகேயன் தான் மனதில் நிற்கிறார். ராயபுரம் பீட்டராக ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் போதும், அடிமையாக தனக்கு கிடைத்த ஐந்து பேரைப் பயன்படுத்தி வீட்டிற்கு வெள்ளையடிப்பதும், பிரிட்ஜ் வாங்கிப் போடுவதும் அவருக்கே உரிய டிரேட் மார்க் நடிப்பு.
“பாக்ஸிங்னா விளையாட்டு தானே?” என்று அப்பாவியாக கேட்பது, காதலியின் தந்தையிடம் திருக்குறள் சொல்வதற்கு பதிலாக, பல குரல்களில் மிமிக்கிரி செய்து காட்டுவது போன்ற காட்சிகளில் கைதட்டல்களை அள்ளுகிறார்.
வில்லனின் காலில் விழுந்து கெஞ்சுவது, அடிவாங்கி அழுவது போன்ற காட்சிகளில் நெகிழ வைக்கிறார்.
அடுத்ததாக ஹன்சிகா, உடல் எடையை கணிசமாகக் குறைத்து, பார்ப்பதற்கு ‘பிட்’டாக அழகாக இருக்கிறார். “ம்ம்ம்… இந்த பொண்ணுக்காக நான் கூட பாக்ஸர் ஆவேன் பா” என்று பக்கத்து சீட்டில் இருப்பவர் நீண்ட பெருமூச்சு விட்டு கூறியது காதில் விழுந்தது.
‘எங்கேயும் காதல்’ படத்திற்குப் பிறகு, ஹன்சிகாவின் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த கிடைத்த படம் என்றால் ‘மான் கராத்தே’ தான்.
“நீ பாக்ஸர் இல்லன்னா என்ன பண்ணுவேன்… அழுவேன்… அப்பா மடியில போய் சாய்ஞ்சுக்குவேன்… என்ன ஒருத்தன் ஏமாத்திடான்னு சொல்லி புலம்புவேன்” என்று ஹன்சிகா கண்களில் வழியும் கண்ணீரோடு கூறும் ஒரு காட்சி அற்புதம்.
இது தவிர படத்தில் வில்லனாக வரும் வம்ஸி கிருஷ்ணா, அவரது மனைவியாக வரும் நடிகை, அடுத்த சந்தானம் என்று அழைக்கப்படும் சதீஸ், ஷாயாஜி ஷிண்டே போன்றவர்கள் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
ரெப்ரியாக வரும் சூரி சில காட்சிகளில் வந்தாலும் சிரிப்பில் அதிர வைக்கிறார்.
ஒளிப்பதிவு, இசை
படத்தின் ஒளிப்பதிவும், அதற்கேற்ற பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளன.
படத்தின் ஒளிப்பதிவை சுகுமார் செய்திருக்கிறார். மலைப்பாதையில் வாகனம் செல்லும் காட்சி, காட்டில் அருவி காட்சி, ஸ்டேடியம் காட்சி போன்றவற்றில் அவர் வைத்திருக்கும் ‘ஏரியல் வியூ’ பிரம்மாண்டத்தை ஏற்படுத்துகின்றது.
குத்துச் சண்டையில் வாயிலிருந்து இரத்தம் சிந்துவது, வியர்வை துளிகள் தெறிப்பது போன்ற ஸ்லோமோசன் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.
அதே நேரத்தில், பாடல் காட்சிகளில் வரும் பின்னணி சூழல்கள் படம் பிடிக்கப்பட்ட விதமும் கூடுதல் அழகு சேர்க்கிறது.
இந்த படத்தில் இன்னொரு கதாநாயகன் என்றால் அனிருத் தான். காரணம் பின்னணி இசை. காட்சிகளுக்கேற்ப புல்லரிக்கும் விதத்தில் பின்னணி இசையில் ரசிகர்களை வெகுவாக கவர்கிறார்.
‘மாஞ்சா’, ‘டார்லிங் டம்பக்கு’, ‘சரிகம பதநி’ போன்ற பாடல்கள் மனதில் நிற்கின்றன. ஆனால் பாடல் வரிகள் நிற்குமா என்பது சந்தேகமே.
மொத்தத்தில் குடும்பத்தோடு திரையரங்கிற்கு சென்று இரண்டரை மணி நேரம் ஜாலியாக, கலகலப்பாக ரசித்து விட்டு வர வேண்டிய படம்.
‘மான் கராத்தே’ – மகிழ்ச்சி தரும் …
– செல்லியல் விமர்சனக் குழு