தொலைக்காட்சி புகழ் நடிகை
அழகும் கவர்ச்சித் தோற்றமும் கொண்ட ஸ்மிருதி இந்திய அழகிப் போட்டியில் 1997ஆம் ஆண்டில் இறுதிச் சுற்று வரை வந்து வெல்ல முடியாமல், பின்னர் தொலைக்காட்சி நாடகங்களில் நடித்துப் புகழ் பெற்றார். அதனால், வட நாட்டு மக்களிடையே பிரபலமும் ஆனார்.
இன்றைக்கு தனது தொலைக்காட்சி நாடகங்களால், வட இந்தியாவில் இல்லங்கள் தோறும் அறியப்பட்டவராக ஸ்மிருதி திகழ்கின்றார்.
அவரது அரசியல் வளர்ச்சிக்கு வெறும் தொலைக்காட்சி புகழ் மட்டும் – அவரது கவர்ச்சி மட்டும் காரணமல்ல – மாறாக, அவருக்கு சிறந்த அரசியல் அறிவும் ஒரு காரணமாக இருக்கின்றது என்று சில இந்திய விமர்சகர்கள் அவரை வர்ணித்திருக்கின்றனர்.
பாஜகவில் மூத்த மகளிரணித் தலைவர்களாகக் கருதப்படும் உமா பாரதி, சுஷ்மா சுவராஜ் போன்றவர்களுக்கு வயதாகி விட்டதால், நடுத்தர வயதுப் பெண்மணியான ஸ்மிருதி அந்தக் கட்சியில் அடுத்த கட்ட மகளிரணித் தலைவியாகக் கருதப்படுகின்றார்.
மகளிர் பகுதியில் பல பதவிகளை வகித்த அவர் தற்போது பாஜகவில் உதவித் தலைவராக இருக்கின்றார். குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ்ய சபா உறுப்பினராகவும் பதவி வகித்திருக்கின்றார்.
ராகுலுக்கு எதிரான பிரச்சாரம்…
சற்றே பருமனான உடலமைப்பைக் கொண்டவர் என்றாலும், அவரது கவர்ச்சியான, தோற்றமும், களையான பொட்டு வைத்த முக அழகும் இந்தியத் தகவல் ஊடகங்களின் கவனத்தை அவரை நோக்கித் திருப்பியிருக்கின்றது.
2004ஆம் ஆண்டிலேயே காங்கிரஸ் பிரமுகர் இன்றைய அமைச்சர் கபில் சிபிலை எதிர்த்துப் போட்டியிட்டிருந்தாலும் ஸ்மிருதி அந்தப் போட்டியில் தோல்வியையே தழுவினார்.
இருந்தாலும், தொடர்ந்து கட்சி அளவில் முன்னேறத் தொடங்கினார் ஸ்மிருதி. இந்தப் பொதுத் தேர்தலில் ராகுலை எதிர்த்துப் போட்டியிடுவதால் திடீரென புகழ் உச்சத்துக்குச் சென்றுள்ள ஸ்மிருதி, வரும் தேர்தலில் ராகுலை மட்டும் தோற்கடித்து விட்டால்…
பின்னர் சொல்லவே வேண்டியதில்லை…அகில உலகிலும் புகழ் பெற்றுவிடுவார்.
காங்கிரசின் தலையாய வேட்பாளரான ராகுலை மண்ணைக் கவ்வ வைத்த பெருமையையும், அவரது பிரதமர் கனவுகளை நொறுக்கித் தள்ளிய சிறப்பையும் பெற்று பாஜகவின் முன்னணி தலைவர்களில் ஒருவராகக் கொண்டாடப்படுவார் ஸ்மிருதி இரானி.
-இரா.முத்தரசன்