ஏப்ரல் 5 – காணாமல் போன மாஸ் விமானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டிருக்கும் சீனக் கப்பல் ஒன்று, நாடித் துடிப்பு போன்றதோர் ஒலியை 37.5 அலைவரிசையில் அடையாளம் கண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து காணாமல் போன விமானத்தைத் தேடும் வேட்டையில் புதிய தகவல்கள் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு திடீரென மீண்டும் முளைத்துள்ளது.
விமானம் விழுந்திருக்கலாம் எனக் கருதப்படும் பிரதேசத்தில் இருந்து இந்த ஒலி வந்துள்ளதால், இந்த ஒலி உயிருள்ள மனிதரின் நாடித் துடிப்பா அல்லது காணாமல் போன விமானத்தின் கறுப்புப் பெட்டியில் இருந்து வெளியாகும் ஒலியா அல்லது வேறுவிதமான சத்தமா என்பது போன்ற ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.
வெளியாகியுள்ள ஒலிகள் விமானத்தின் கறுப்புப் பெட்டி ஒலியையும், அலைவரிசையையும் ஒத்திருப்பதால், தேடுதல் வேட்டையில் இது மிக முக்கியமான கட்டம் என தகவல் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாளை மீண்டும் தேடுதல் வேட்டை தொடங்கும்போது, இந்த ஒலி குறித்த மேலும் தெளிவான தகவல்கள் வெளியாகலாம் என்ற நம்பிக்கையும் பிறந்திருக்கின்றது.
இதற்கிடையில் காணாமல் போன விமானம் தேடப்படும் கடல் பகுதியில் சில பொருட்கள் மிதப்பது காணப்பட்டதாகவும் அந்தப் பொருட்களை தேடுதலில் ஈடுபட்டிருந்த விமானம் புகைப்படங்கள் எடுத்திருப்பதாகவும், சீன செய்தி நிறுவனமாக சின் ஹூவா செய்தி வெளியிட்டுள்ளது.