ஏப்ரல் 8 – இப்போதெல்லாம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கடுமையான விதிமுறைகளால், பொதுமக்களின் பார்வைக்கு வேட்பாளர்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல முக்கியமான தகவல்கள் பொதுவில் வைக்கப்பட்டு விடுகின்றன.
அப்படிப்பட்ட அதிமுக்கியமான தகவல்களில் ஒன்று, வேட்பாளருக்கும் அவரது மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் எவ்வளவு சொத்துகள் இருக்கின்றன என்பதுதான்.
இதனால்தான், ஒரு சில வேட்பாளர்களைப் பார்த்து ‘அம்மாடியோவ்! அவருக்கு அவ்வளவு சொத்தா இருக்கின்றது’ என பொதுமக்கள் மூக்கின்மீது விரலை வைக்கின்றனர்.
அப்படிப்பட்ட வேட்பாளர்களில் ஒருவர் நந்தன் நீலகேணி (படம்).
காங்கிரஸ் கட்சியின் சார்பாக, கர்நாடக மாநிலத்தில் தென் பெங்களூர் தொகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் அவரது சொத்து மதிப்பு 77 பில்லியன் ரூபாய். அதாவது மலேசிய ரிங்கிட்டில், ஏறத்தாழ 3,850 மில்லியன்!
அந்த வகையில் ஒரே நாளில் அகில இந்தியாவின் கவனத்தையும், தன் சொத்து மதிப்பால் ஈர்த்து விட்ட வேட்பாளர்களில் ஒருவராக நந்தன் நீலகேணி திகழ்கின்றார்.
அதிகாரபூர்வத் தகவல்களின்படி இன்றைக்கு இந்தியத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் மிகப் பெரிய பணக்காரர் நந்தன் நீலகேணிதான்.
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி
முதல் முறையாக தேர்தல் களத்தில் குதித்திருக்கும் நந்தன் நீலகேணி பெங்களூரில் செயல்படும் இன்போசிஸ் எனப்படும் முன்னணி கணினித் தொழில் நுட்ப நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணியாற்றியவர்.
இந்திய பங்குச் சந்தையில் இடம் பெற்றிருக்கும் மிகவும் விலையுயர்ந்த பங்குகளில் ஒன்றான இன்போசிஸ் நிறுவனத்தில் நந்தன், அவரது மனைவி மற்றும் அவரது மகனும், மகளும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரத்தை வைத்திருக்கின்றனர். அதன்மூலம் தான் அவர்களின் சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.
நடுத்தரக் குடும்பத்திலிருந்து கோடீஸ்வரராக…
பெங்களூரைச் சேர்ந்த நந்தன் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் கல்வியில் சிறந்து விளங்கியதால், பம்பாயிலுள்ள இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் (Indian Institute of Technology) மின்சாரப் பொறியியல் துறையில் பட்டம் பெற்றார்.
ஒரு கையில் மதிப்பு வாய்ந்த ஐஐடி பட்டத்துடனும், மற்றொரு கையில் வெறும் 200 ரூபாய் பணத்துடனும் வாழ்க்கையைத் தொடங்கியவர் என்று சில தகவல் ஊடகங்கள் அவரது வாழ்க்கை வரலாற்றில் சுட்டிக் காட்டியுள்ளன.
பின்னர் நாராயண மூர்த்தியுடன் இணைந்து இன்போசிஸ் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தை நிறுவி, 28 ஆண்டு காலம் அதில் பணியாற்றி, உலகின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக அதனை மாற்றிக் காட்டினார்.
அதன் தலைமைச் செயல் அதிகாரியாகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளார். ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்புகளை பெங்களூரில் உருவாக்கினார்.
பின்னர் இந்தியாவின் பொதுமக்களுக்கான அடையாள அட்டை எண் திட்டமான ‘ஆதார்’ எனப்படும் – ஒவ்வொரு இந்தியனுக்கும் தனிப்பட்ட அடையாள அட்டையை வழங்கும் அரசாங்கத் திட்டத்திற்கான அமைப்பின் தலைவராக – காங்கிரஸ் அரசாங்கத்தால் 2009இல் நியமிக்கப்பட்டார்.
இந்தப் பொறுப்பை ஏற்க பிரதமர் மன்மோகன் சிங்கால் பிரத்தியேகமாக அழைக்கப்பட்டவர் நந்தன் என்பது மற்றொரு சிறப்பு.
தற்போது அந்தப் பொறுப்பிலிருந்து விலகி, தென் பெங்களூர் தொகுதியில் போட்டியிடுகின்றார்.
வென்றால் அமைச்சராவாரா?
காங்கிரஸ் மத்தியில் ஆட்சி அமைத்தால், முக்கிய அமைச்சரவைப் பொறுப்பில் நந்தன் நீலகேணி அமர்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அவரும் அவரது மனைவியும் பல்வேறு தர்ம காரியங்களுக்கு நன்கொடைகள் அளித்து வருகின்றனர் என்பதோடு, பல சமூகத் திட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் நிலத்தடி நீர் நிர்வாகம், கழிவு நீர் நிர்வாகம் போன்ற நல்ல நோக்கங்களைக் கொண்ட சமூக அமைப்பில் அவரது மனைவி ரோகிணி தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகின்றார்.
இந்திய அரசின் பத்மவிபூஷன் என்ற உயரிய பட்டத்தையும் நந்தன் பெற்றிருக்கின்றார். டைம் பத்திரிக்கை அவரை 2006-2009 ஆண்டுகளில் உலகில் மிகவும் செல்வாக்கு பெற்ற 100 மனிதர்களில் ஒருவராகத் தேர்வு செய்தது.
உலகின் 100 மிகச் சிறந்த சிந்தனையாளர்களில் ஒருவராகவும் பல வெளிநாட்டுப் பத்திரிக்கைகள் அவரைத் தேர்வு செய்திருக்கின்றன.
இப்படிப் பல சிறப்புக்கள் வாய்ந்த நந்தன் நீலகேணி, தான் போட்டியிடும் தென் பெங்களூர் தொகுதியில் பாஜகவின் சார்பில் போட்டியிடும் ஆனந்த் குமார் என்பவரை எதிர்த்துப் போட்டியிடுகின்றார்.
(நந்தன் நீலகேணியை எதிர்த்துப் போட்டியிடும் ஆனந்த் குமார்)
கடந்த 5 தவணைகளாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் ஆனந்த் குமார் அரசியலில் அனுபவம் வாய்ந்தவர். கன்னட மொழியில் சிறப்பாக உரையாற்றக் கூடியவர்.
அதோடு பாஜகவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீண்டும் சேர்ந்துள்ளதால் கர்நாடக மாநிலத்தில் அந்தக் கட்சி மீண்டும் பலம் பொருந்திய கட்சியாகப் பார்க்கப்படுகின்றது.
ஏற்கனவே கர்நாடக மாநில சட்டமன்றத்தைக் கைப்பற்றி ஆட்சி நடத்திய அளவுக்கு பாஜக கர்நாடகாவில் பலம் வாய்ந்தது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
போதாக் குறைக்கு எங்கும் வீசும் நரேந்திர மோடியின் அலை கர்நாடக மாநிலத்திலும் வீசுகின்றது.
இவற்றையெல்லாம் மீறி, தனது கோடிகளால் – நிர்வாகத் திறனால் – அறிவாற்றலால் தென் பெங்களூர் தொகுதியைக் கைப்பற்றுவாரா நந்தன் நீலகேணி?
கர்நாடகம் மாநிலம் மட்டுமல்ல, அகில இந்தியாவும் இந்தக் கேள்விக்கு விடை காண காத்திருக்கின்றது.
– இரா.முத்தரசன்