ஏப்ரல் 25 – மறைந்த பிரபல இந்திப்பட நடிகர் சுனில் தத் ஒரு காலத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து மும்பாயின் நாடாளுமன்றத் தொகுதியில் வென்று டில்லி அரசியலில் ஒரு சுற்று வந்தார். இவரது மனைவிதான் மறைந்த பிரபல இந்திப்பட நடிகை நர்கீஸ்.
அவர்களின் மகன் சஞசய் தத் இந்திப் பட உலகில் பிரபல முன்னணிக் கதாநாயகனாக உயர்ந்தாலும், மும்பாய் கலவரங்களின் பின்னணியில் இருந்த மும்பாய் தாதாக்களுடன் தொடர்பில் இருந்தார் என்றும் சட்டத்துக்கு புறம்பான முறையில் ஆயுதம் வைத்திருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டு தற்போது சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றார்.
(சிறையில் இருக்கும் தனயன் – நடிகர் சஞ்சய் தத்துடன்)
ஆனால், சஞ்சய் தத்தால் இழந்து போன சுனித் தத் குடும்பத்தின் மானத்தைக் காப்பாற்றும் வகையில் அரசியலில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியின் சார்பில் மும்பாயில் அரசியல் களத்தில் ஒரு கலக்கு கலக்கி வருகின்றார் பிரியா தத்.
நேற்று 6வது கட்டமாக வாக்களிப்பு நடந்த மும்பாய் வடக்கு நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியில் குதித்திருக்கும் பிரியா தத், பல காரணங்களால் இந்திய அளவில் கவனிக்கப்படும் வேட்பாளர்களில் ஒருவராக மாறியுள்ளார்.
கவனிக்கப்படுவதற்கான காரணங்கள்…
பிரியா தத் இந்திய அளவில் மிகப் பிரபலமாக இந்த தேர்தலில் பார்க்கப்படுவதற்கு முதல் காரணம் அவரது பிரசித்தி பெற்ற, சர்ச்சைக்குரிய சினிமா நட்சத்திரங்களைக் கொண்ட குடும்பப் பின்னணிதான்.
மற்றொரு காரணம், எங்கு நோக்கினும் இறங்கு முகமாக இருக்கும் காங்கிரசின் நிலைமை, பிரியா தத்தின் பிரபல்யத்தால் மும்பாய் வடக்கு தொகுதியில் சற்றே மாற்றம் காணுமா – அந்த தொகுதியை மீண்டும் வெல்ல முடியுமா என்ற காங்கிரஸ் கட்சியின் நப்பாசைதான்.
அதைவிட முக்கியமாக, மற்றொரு காரணம், அவரை எதிர்த்து பாஜகவின் சார்பில் களம் இறங்கியிருக்கும் பூனம் மகாஜன் என்ற மற்றொரு பெண் வேட்பாளர்.
பிரியா தத்தை எதிர்ப்பது பிரமோத் மகாஜன் மகள்….
(பிரியா தத்தை எதிர்த்து நிற்கும் பூனம் மகாஜன் – பின்னணி படத்தில் அவரது தந்தை பிரமோத் மகாஜன்)
சில ஆண்டுகளுக்கு முன்புவரை பாஜகவின் திறமையான, மேடைப் பேச்சுத் திறன் கொண்ட முன்னணித் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் பிரமோத் மகாஜன். ஆனால், தனது சகோதரரால் சில ஆண்டுகளுக்கு முன்னால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிரமோத் மகாஜனின் பிரபல்யத்தை முன்வைத்து பாஜகவால் களம் இறக்கப்பட்டிருக்கும் பூனம் மகாஜன் பரவி வரும் மோடி அலையால் மும்பாய் வடக்கு தொகுதியில் பிரியா தத்தை தோற்கடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியிருப்பதும், இந்த மும்பாய் வடக்கு தொகுதியின் பக்கம் தகவல் ஊடகங்களின் – அரசியல் ஆர்வலர்களின் கவனம் திரும்பியிருப்பதற்கான காரணங்களுள் ஒன்றாகும்.
சுனில்தத் வாரிசாக களமிறங்கியவர்
2005ஆம் ஆண்டில் சுனில் தத் காலமானதைத் தொடர்ந்து அவரது வாரிசாக காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரியா தத் அதன் பின்னர் 2009 தேர்தலிலும், தனது சேவைகளாலும், பிரபல்யத்தாலும் மீண்டும் வெற்றி பெற்றார்.
ஆனால், இந்த முறை மிகப்பெரிய தடைகள் அவர் முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றன.
காங்கிரஸ் மீதுள்ள அதிருப்தி அலை – இன்னொரு பக்கம் வீசும் மோடி அலை – எதிர்த்து நிற்பதோ பிரபல பாஜக தலைவர் பிரமோத் மகாஜன் மகள் பூனம் மகாஜன் – இத்தனை சாதகமற்ற சூழ்நிலைகளையும் மீறி பிரியா தத் மும்பாய் வடக்கு நாடாளுமன்ற தொகுதியில் மீண்டும் வெற்றிக் கொடி நாட்டுவாரா?
அப்படி வென்று விட்டால், அந்த காரணத்திற்காகவே, காங்கிரசின் அடுத்த கட்ட முக்கிய தலைவராக பிரியா தத் காங்கிரசில் உயர்வார்.
-இரா.முத்தரசன்