Home India Elections 2014 கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 11: தயாநிதி மாறன் மீண்டும் மத்திய சென்னையில் வெல்வாரா?

கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 11: தயாநிதி மாறன் மீண்டும் மத்திய சென்னையில் வெல்வாரா?

217
0
SHARE

Dayanidi Maran 440 x 215ஏப்ரல் 21 – 2004ஆம் ஆண்டில் தயாநிதி மாறன் நாடாளுமன்ற வேட்பாளராக தமிழ் நாட்டின் மத்திய சென்னை வேட்பாளராகக் களமிறக்கப்பட்டபோது, மிகப் பெரிய முன்னோட்ட விளம்பரங்களுடன், ஆர்ப்பாட்டங்களுடன், கருணாநிதி பேரன், கருணாநிதியின் மனசாட்சி முரசொலி மாறனின் மகன் என ஏகப்பட்ட வர்ணணைகளுடன் உலா வந்தார்.

2009 தேர்தலிலும் மீண்டும் வெற்றி பெற்றார்.

முதலில் தொலைத் தொடர்பு அமைச்சராக பல்வேறு புதுமையான நவீனமான திட்டங்களைக் கொண்டு வந்து மக்களின் அபிமானத்தைப் பெற்றவர், அப்போது நாட்டின் முக்கியமான எதிர்காலத் தலைவர்களில் ஒருவராகப் பார்க்கப்பட்டார்.

ஆனால், இந்த முறை அவரது மறு பிரவேசம் மிகவும் அடக்கி வாசிக்கப்படுகின்றது.

அதற்கு கருணாநிதி குடும்பத்துடன் நிகழ்ந்த மோதல்களுக்குப் பின் அவரும் அவரது சகோதரர் சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனும் சமரசமாகியிருப்பது ஒரு காரணம் என்றால்,

இந்த முறை மு.க.ஸ்டாலினை முன் நிறுத்தித்தான் திமுக தேர்தலில் களம் காண்கின்றது என்பதால் மாறன் போன்ற மற்ற இரண்டாம் நிலை திமுக தலைவர்கள் சற்றே பின்னணியில் வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது மற்றொரு காரணம்.

மாறனின் ஊழல் பின்னணி

மாறன் இந்த தேர்தலில் அடக்கி வாசிப்பதற்கு மக்களுக்கு நன்கு தெரிந்த  வேறு சில காரணங்களும் இருக்கின்றன.

kalanithi Maranதகவல் தொடர்பு மத்திய அமைச்சராக இருந்தபோது அதிகார துஷ்பிரயோகம் செய்தார், தனது அண்ணன் கலாநிதி மாறனின் (படம்) சன் டிவிக்கு கட்டணமில்லாமல் தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்தார் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம்.

நம் நாட்டு ஆனந்த கிருஷ்ணனின் மேக்சிஸ் நிறுவனம் தமிழ் நாட்டில் முதலீடு செய்த ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனம் வாங்கப்பட்ட விவகாரத்திலும் தயாநிதி மாறன் ஊழல் புரிந்தார், அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டுகள் இன்னொரு புறம்.

மாறனுக்குப் பின் மத்திய அமைச்சராக வந்த ராஜாவின் 2ஜி ஊழலுக்குப் பின்னணியில் இருந்தவரும் மாறன்தான் என்ற புலனாய்வுக் குழுவின் சந்தேகக் கண்கள் ஒரு புறம்.

Dayanidi Bill Gates 300 x 200இப்படி திரும்பிய பக்கமெல்லாம் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், வீம்பாக, விடாப்பிடியாக மாறன் மீண்டும் வேட்பாளராகியுள்ளார், கருணாநிதியின் உறவினர் என்ற ஒரே காரணத்தால்!

கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் ஓஹோவென்று கொடிகட்டிப் பறந்த சன் டிவி குழுமம் இன்றைக்கு வர்த்தக ரீதியாக மற்ற தொலைக்காட்சிகளின் போட்டிகளால் சற்றே தடுமாறிக் கொண்டிருக்க,

அவர்களின் மலிவு விலை விமான நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்’(Spice Jet) போன்ற சில வர்த்தக முயற்சிகளும் எதிர்பார்த்த அளவுக்கு பலனைத் தராமல் தள்ளாட்டம் போடுகின்றன என்ற நிலைமைகளும் தற்போது மாறன் சகோதரர்களை சூழ்ந்து கொண்டுள்ளன.

மாறன் போன்று ஊழல் பின்னணி  கொண்டவர்களுக்கு வாக்களிக்கக் கூடாது என்ற முழக்கம் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக தற்போது படித்தவர்களிடையேயும், இளைஞர்களிடத்திலும் பெருகியுள்ளதால், படித்தவர்களையும், இலவசங்களையும் அன்பளிப்புகளையும் எதிர்பார்க்காத நடுத்தர மக்களையும் கொண்ட மத்திய சென்னையில் மாறனின் வெற்றி இந்த முறை சிரமமாகியிருக்கின்றது.

அவரை எதிர்த்து அதிமுக சார்பில் நிற்கும் எஸ்.ஆர்.விஜயகுமாருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக தகவல் ஊடக ஆய்வுகள் காட்டுகின்றன.

ஜெயலலிதாவின் பிரச்சாரத் தாக்குதல்

இன்றைய தேதிகளில் சென்னையில் பிரச்சாரம் செய்ய களமிறங்கியுள்ள ஜெயலலிதாவும், மத்திய சென்னையில் கலந்து கொண்ட கூட்டத்தில் மாறனைக் குறிவைத்து  தாக்குதல் நடத்தியிருக்கின்றார்.

ராஜா நடத்திய 2ஜி ஊழல் விவகாரத்தின் விதைகளைப் போட்டவர் மாறன் என்றும், ஏர்செல் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்ட விவகாரத்திலும் மாறனே ஊழல் புரிந்தார் என்றும் ஜெயலலிதா நேரடித் தாக்குதல் தொடுத்திருக்கின்றார்.

வென்றால் மத்தியில் மாறனுக்கு முக்கிய பங்கு…

இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் மாறன் மீண்டும் மத்திய சென்னையில் வென்று திமுகவின் மானத்தைக் காப்பாற்றுவாரா,

அவரது ஊழல் பின்னணி தெரிந்தும் படித்த மக்கள் வாக்களிப்பார்களா என்ற கேள்விகள் எழுந்துள்ளதால்,

இன்றைக்கு கவனிக்கப்படும் வேட்பாளர்களில் ஒருவராக தயாநிதி மாறன் தகவல் ஊடகங்களால் ஊடுருவிப் பார்க்கப்படுகின்றார்.

மாறன் அனைவராலும் கவனிக்கப்படும் வேட்பாளராக இருப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு.

stalinதிமுகவை இந்த தேர்தலில் தலைமை ஏற்று முன் நடத்திச் செல்லும் ஸ்டாலினுக்கு ஆங்கிலம் அவ்வளவாக வராது. இதுவரை ஒரு முறை கூட ஆங்கிலத்தில் அவரது பேட்டி எந்தத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானதில்லை. மத்திய அரசாங்கத்திலும் டில்லியிலும் ஸ்டாலின் என்றைக்குமே தொடர்புகள் வைத்துக் கொண்டதில்லை.

இந்நிலையில் அப்படியே திமுக கணிசமாக தொகுதிகளில் வெற்றி பெற்றால் – அதன்மூலம் மத்தியில் ஆட்சி அமைப்பதில் பங்கு வகிக்கும் சூழ்நிலை தப்பித் தவறி ஏற்படுமானால் – தயாநிதி மாறனும் மத்திய சென்னையில் வெற்றி பெற்று வந்தால் –

அதன் பின்னர் ஸ்டாலினின் பிரதிநிதியாக, திமுகவின் பிரதிநிதியாக டில்லியில் தயாநிதி மாறன்தான் முன் நிறுத்தப்படுவார். அவரது கையும் மீண்டும் ஓங்கும்.

அதனால்தான், திமுக வேட்பாளர்களில் அவர் மட்டும் முக்கியமாக கவனிக்கப்படுகின்றார்.

ஆனால் இறுதி முடிவு…. ஏப்ரல் 24ஆம் தேதி…. மத்திய சென்னை வாக்காளப் பெருமக்களின் விரல் நுனிகளில்!

-இரா.முத்தரசன்

Comments