ஏப்ரல் 20 – கர்ப்பாலின் அகால மரணம் மலேசியாவைத் தாண்டியும் அயல் நாடுகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. காரணம் அவர் பல வெளிநாட்டுப் பிரமுகர்களின் வழக்குகளையும் கையாண்டு உள்ளார்.
அந்த வகையில், நமது நாட்டை உலுக்கிய அல்தான்துன்யா கொலை வழக்கிலும் அல்தான்துன்யாவின் தந்தையின் சார்பில் அந்த வழக்கில் கர்ப்பால் பங்கு பெற்றார்.
மங்கோலியாவின் உள்நாட்டுப் பத்திரிக்கை ஒன்று கர்ப்பாலின் மரணச் செய்தியை வெளியிட்டு அதோடு, அல்தான்துன்யாவின் தந்தை செடவ் ஷாரிபுவின் (படம்) இரண்டு பக்க நேர்காணலையும் விரிவாக வெளியிட்டுள்ளது.
அக்டோபர் 2006இல் தனது மகள் அல்தான்துன்யா பிளாஸ்டிக் வெடிகுண்டு வைக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் தனக்கு ‘இந்த மிகப் பெரிய மனிதரான கர்ப்பால் சிங்’ பெருமளவில் உதவி புரிந்தார் என்று அந்த நேர்காணலில் ஷாரிபு விளக்கியுள்ளார்.
அல்தான்துன்யா வழக்கில் ஷாரிபு குடும்பத்தின் சார்பில் பார்வையாள வழக்கறிஞராக கர்ப்பால் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது வழக்கின் போக்கு குறித்தும் தகவல்கள் குறித்தும் தனக்கு அடிக்கடி கர்ப்பால் தெரிவித்து வந்தார் என்றும் ஷாரிபு கூறியுள்ளார்.
தனது மகள் கொல்லப்பட்டபோது, தன்னை தொடர்பு கொண்ட கர்ப்பால், “இந்த காலகட்டத்தில் உங்களுக்கு மலேசியாவில் யாரும் உதவ முன்வர மாட்டார்கள். நான் முன்வருகின்றேன்” என்று கூறினார்.
“சிறந்த மனித உரிமைப் போராளி”
“என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி நின்ற எனக்கு அவர் வழிகாட்டினார். அவர் சிறந்த வழக்கறிஞர் மட்டுமல்ல. சிறந்த மனித உரிமைப் போராட்டவாதியும் ஆவார்” என ஷாரிபு புகழாரம் சூட்டியுள்ளார்.
கடைசியாக 2012ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி கர்ப்பாலை அவரது கோலாலம்பூர் அலுவலகத்தில் தான் சந்தித்ததாகவும், அப்போது அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதோடு, கர்ப்பாலின் முழங்காலின் மீது வைப்பதற்கு மருத்துவ குணங்கள் கொண்ட மொங்கோலிய போர்வை ஒன்றை அவருக்கு பரிசாக வழங்கியதாகவும் அல்தான்துன்யாவின் தந்தை ஷாரிபு தெரிவித்துள்ளார்.
அல்தான்துன்யா சார்பில் 100 மில்லியன் நஷ்ட ஈடு கேட்டு, மலேசிய அரசாங்கத்திற்கும், முன்னாள் அரசியல் ஆய்வாளர் அப்துல் ரசாக் பகிண்டா மற்றும் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு எதிராகவும் அல்தான்துன்யா குடும்பத்தினர் வழக்கு தொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அல்தான்துன்யாவைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட தலைமை இன்ஸ்பெக்டர் அசிலா ஹாட்ரி மற்றும் கார்ப்பரல் சிருல் அசார் உமார் என்ற இரண்டு பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு எதிரான மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் எதிர்வரும் ஜூன் மாதம் விசாரணைக்கு வருகின்றது.
அந்த வழக்கில் அல்தான்துன்யா குடும்பத்தினர் சார்பில் கர்ப்பால் சிங் பார்வையாள வழக்கறிஞராகப் பணியாற்றவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(பின்குறிப்பு : மறைந்த கர்ப்பால் சிங், குடும்ப உறுப்பினர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள், வழக்கறிஞர்கள் என பலரது மனங்களிலும் பல்வேறு காரணங்களால் இடம் பிடித்தவர். அவரைப் பற்றி மற்றவர்கள் கூறியுள்ள விவரங்கள் ‘கர்ப்பால் நினைவுகள்’ என்ற தலைப்பில் தொடர்ச்சியாக, அவருக்கு அஞ்சலியாக அடுத்த சில நாட்களுக்கு வெளிவரும்)