தென்காசி, ஏப்ரல் 25 – “தமிழகத்தில் அரசியல் மாற்றம் தானாக ஏற்படும்” என, ம.தி.மு.க. பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார். தென்காசி தொகுதி, கலிங்கப்பட்டியில் வரிசையில் நின்று காலை 9.58-க்கு ஓட்டளித்த வைகோ கூறியதாவது,
கூட்டணி அமைந்த காலங்களில், இந்த தொகுதியில், ம.தி.மு.க., போட்டியிடுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இம்முறை எங்கள் கட்சி வேட்பாளர் சதன் திருமலைக்குமாருக்கு பம்பரம் சின்னத்தில் ஓட்டளித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தமிழகம் முழுவதும் எவ்வித பதட்டம், மோதல், கலவரம் இல்லாமல், அமைதியான முறையில் தேர்தல் நடந்தது. இதற்காக, அனைத்துக்கட்சி தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் என மக்கள் தீர்மானித்துவிட்டனர்.
அரசியல் மாற்றம் தமிழகத்தில், 1972-ல் இருந்து, தி.மு.க.,- அ.தி.மு.க., கூட்டணிகளுக்கு வாக்காளர்கள் மாறிமாறி ஓட்டளித்த சூழ்நிலையில், பா.ஜ. தலைமையில் பலம் வாய்ந்த கூட்டணியால், தற்போது நிலைமாறியுள்ளது.
தேர்தலுக்குப்பின், மிக வேகமான அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான சூழ்நிலை தானாக அமையும். பேட்டியில், அ.தி.மு.க. -தி.மு.க.- காங்கிரஸ் என எந்தக்கட்சியையும் வைகோ சாடவில்லை. மிகவும் உற்சாகமாக இருந்தார்.