நியூயார்க், ஏப்ரல் 25- சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 3 ஆண்டு காலமாக, கிளர்ச்சியாளர்கள் போராட்டம் நடந்தி வருகின்றனர்.
அவர்களை அடக்க முயன்ற அதிபரின் ஆதரவு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்து வருகின்ற உள்நாட்டு சண்டையினால் இதுவரை சுமார் ஒரு லட்சம் பேருக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
சிரியாவின் உள்நாட்டு போரினால் ஏற்பட்ட பாதிப்பினை உணர்ந்த ஐ.நா. சபை, அங்கு மனித நேய அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய வழிவிடப்படவேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றியது. ஆனால் இரு தரப்பினரும் இதற்கு செவி சாய்க்கவில்லை.
இந்த நிலையில், சர்வதேச அளவிலான சட்டத்தை சிரியா மீறி வருவதால், அந்த நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று 15 நாடுகளை கொண்ட பாதுகாப்பு சபையை, ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் பாதுகாப்பு சபைக்கு அறிக்கை அளித்துள்ளார்.