இஸ்லாமாபாத், ஏப்ரல் 25 – ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்று வரும் மக்களவைத் தேர்தல் எந்த மாறுதல்களையும் ஏற்படுத்தாது. மக்களிடையே பொதுவாக்கெடுப்பு நடத்துவதே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமையும் என பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் தஸ்னிம் அஸ்லாம் கூறியதாவது:-
“இந்திய ஆக்கிரமிப்பு காஷ்மீரில் நடைபெறும் எந்த தேர்தலும் பொதுவாக்கெடுப்புக்கு மாற்றா அமையாது. இது ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை போன்றது. கராச்சியில் நடந்த ஹமீது மிர் மீதான தாக்குதல் கடும் கண்டனத்துக்குரியது. அதிலிருந்து அவர் விரைவில் மீண்டு வரவேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். ஆனால் இந்திய ஊடகங்கள் இச்சம்பவம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. பொதுவாகவே பாகிஸ்தானுக்கு எதிராக பிரசாரம் செய்யும் போக்கு இந்திய ஊடகங்களிடம் அதிகம் உள்ளது” என்று கூறியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் மூத்த தொலைக்காட்சி பத்திரிகையாளர் ஹமீத் மிர் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சகம் புகார் ஒன்றை பதிவு செய்துள்ளது. அதில் வெளிநாட்டு ஊடகங்கள், குறிப்பாக இந்திய ஊடகங்கள் இச்சம்பவத்தை தவறாக பெரிதுபடுத்தி ஒளிபரப்பியதாக குற்றம் சாட்டியுள்ளது.