ஏப்ரல் 8 – மாயமான மாஸ் MH370 விமானத்தில் இருந்து கடைசியாக துணைக்கோளுக்குக் கிடைத்த முற்றுப்பெறாத சிக்னலை (Partial Ping) ஆராய்ந்ததில், விமானத்தின் எரிபொருள் முழுவதுமாக தீர்ந்த நிலையில் தான் அது கடலில் விழுந்திருக்கிறது என பிரிட்டிஷ் நாட்டின் துணைக்கோள் நிறுவனமான இன்மார்சட் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்து இன்மார்சட் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரான க்ரிஸ் மெக்லாக்லின் கூறுகையில், “இந்த முற்றுபெறாத சிக்னல் விமானம் அதன் எரிபொருள் தீர்ந்த நிலையில், அதன் இயக்கங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு கடைசியாக துணைக்கோளுடன் தொடர்பு கொண்டது போல் உள்ளது. காரில் எப்படி எரிபொருள் தீர்ந்த நிலையில் அதன் கடைசி இயக்கங்கள் இருக்குமோ அதே போல் தான் இந்த விமானத்திலும் அனைத்து தகவல் தொடர்பு சாதனங்களும் நிறுத்திக் கொண்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
கடைசியாக இந்த முற்றுப் பெறாத சிக்னல் கிடைத்த இடத்தில் தேடுதல் பணியை மேற்கொள்ள கடந்த மார்ச் 28 ஆம் தேதி, இந்தியப் பெருங்கடலில் ஏற்கனவே தேடுதல் நடத்திக் கொண்டிருந்த இடத்திலிருந்து 1,100 கிலோ மீட்டர் வடக்கு நோக்கி மீட்புப் படையினர் சென்றனர்.
விமானத்தில் இருந்து முற்றுப் பெறாத சிக்னல் கிடைத்துள்ளது என்ற தகவலை விசாரணை அதிகாரிகள் கடந்த மார்ச் 25 ஆம் தேதி வெளியிட்டதைத் தொடர்ந்து தேடுதல் பணியில் இந்த உடனடி மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.