ஆப்கானிஸ்தான், ஏப்ரல் 7 – ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தலை நடத்த விடாமல், பல அச்சுறுத்தல்கள் செய்த தலிபான்களின் முயற்சிகளையும் மீறி, ஆப்கானிஸ்தான் அரசு, அதிபர் தேர்தலை சுமூகமாக நடத்தி முடித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள், சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லாடன் உள்ளிட்டவர்களுக்கு புகலிடம் அளித்ததால், 2001-ல், அமெரிக்கா தலைமையிலான, நேட்டோ படைகள், தாக்குதல் நடத்தின. ஆட்சியை இழந்த தலிபான்கள், பாகிஸ்தான் எல்லையில் ஓடி ஒளிந்தனர்.
அதன்பின், ஜனநாயக ஆட்சி மலர்ந்தாலும், தங்கள் நாட்டு பாதுகாப்புக்காக, இன்னும் அமெரிக்காவை தான் சார்ந்துள்ளது. ஆட்சி இழந்த தலிபான்கள், பல்வேறு பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிபர் தேர்தலை எதிர்கொண்ட ஆப்கன் மக்கள், தலிபான்களின் அச்சுறுத்தலையும் மீறி அதிகமான வாக்குகள் பதிவு செய்தனர்.
12 மில்லியன் வாக்காளர்களில், 7 மில்லியன் வாக்குகள் பதிவாகியுள்ளதாக ஆப்கானிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 8 வேட்பாளர்களில் ஹமீத் ஹர்ச்சாய் வெற்றி பெறுவார் என நம்பப்படுகிறது.
முதல் சுற்றுக்கான தேர்தல் முடிவுகள் எதிர்வரும் 24-ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா,
ஆப்கன் மக்கள் ஜனநாயகத்தை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளனர். இது ஆப்கன வரலாற்றின் முக்கியமான மைல்கல்” என தெரிவித்துள்ளார்.