Home அவசியம் படிக்க வேண்டியவை கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 7 – குல் பனாக் – சண்டிகாரை மையமிட்டிருக்கும் ஆம் ஆத்மி...

கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 7 – குல் பனாக் – சண்டிகாரை மையமிட்டிருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் கவர்ச்சிப் புயல்

813
0
SHARE
Ad

ஏப்ரல் 8 – இந்தப் பக்கங்களில் நீங்கள் பார்க்கும் பெண்மணியின் கவர்ச்சியான படங்கள், சினிமாப் பக்கங்களில் இடம் பெறுவதற்கு பதிலாக தவறுதலாக இங்கே இடம் பெற்று விட்டனவோ என நீங்கள் நினைக்கலாம்.

#TamilSchoolmychoice

Gul Panag 1 - 300 x 200Gul Panag 300 x 200

 ஆனால் அப்படியெல்லாம் இல்லை. அவர் அரசியல்வாதிதான்!

அவர்தான் குல் பனாக் – ஆம் ஆத்மி கட்சி சார்பில் வட நாட்டின் சண்டிகார் தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்.

கடுமையான போட்டியாகக் கருதப்படும் இந்திய அழகிக்கான போட்டியில் 1999ஆம் வருடம் முதல் நிலை வெற்றியாளராக மகுடம் சூட்டப்பட்டு, அதே போட்டியில் மிகவும் அழகான சிரிப்புக்கு (Most beautiful smile) சொந்தக்காரர் என்ற பட்டமும் சூட்டப்பட்டவர் குல் பனாக்.

இந்திப் படங்களில் நடிகையாக…

Gul Panag 2 - 300 x 200பின்னர் படங்களில் நடிக்கத் தொடங்கியவர், தயங்காமல் அங்கே கவர்ச்சித் தோரணம் விரித்தார். காதல் காட்சிகளில் நெருக்கம், முத்தக் காட்சிகள் என இந்திப் படவுலகை ஒரு வலம் வந்தார்.

பஞ்சாபிப் படங்களிலும் நடித்திருக்கின்றார். பல நிறுவனங்களுக்கு வணிக முத்திரைக்கான தூதுவராகவும் (Brand Ambassador)  பங்கு பெற்றவர். தொலைக்காட்சி விளம்பரப் படங்களிலும் நிறைய நடித்தவர்.

இடைப்பட்ட காலத்தில் பல சமூக இயக்கங்களிலும் ஆர்வம் கொண்டு சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்தார்.

பின்னர் அரசியல் ஆர்வத்தால், அரவிந்த் கெஜ்ரிவால் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார்.

குல் பனாக் போன்ற பல பிரபலங்களைச் சேர்த்துள்ள ஆம் ஆத்மி கட்சி சண்டிகார் தொகுதியில் அவரை நிறுத்த – அங்குள்ள வாக்காளர்கள் ஜொள் விட்டுக் கொண்டு அவரை ரசிக்க – ஒரே நாளில் அகில இந்திய அளவில், தன் அழகுக்காகவும், கவர்ச்சிப் பிரபல்யத்தினாலும் கவனிக்கப்படும் வேட்பாளராகி விட்டார் குல் பனாக்.

Gul Panag Miss Universe 440 x 215(முன்னாள் இந்திய அழகியாக 1999இல் – நடுவில்)

“என்னை வெறும் கவர்ச்சிக்காகவும், திரைப்பட நடிகை என்ற பிரபல்யத்துக்காவும் பார்க்கப்படக் கூடாது மாறாக தனது சேவைகளையும் எதிர்காலத்தில் நான் இந்த தொகுதிக்கு என்ன செய்யப் போகின்றேன் என்பதையும் வைத்து எனக்கு வாக்களியுங்கள்” எனப் பிரச்சாரக்கூட்டங்களில் முழங்கி வருகின்றார் குல் பனாக்.

தேர்தல் பிரச்சாரங்கள் தொடங்கியது முதல், நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதாகவும் குல் பனாக் கூறியுள்ளார்.

குல் பனாக்கிற்குப் போட்டியாக இந்தி நடிகை கிரண் கெர்

குல் பனாக் போட்டியிடும் சண்டிகார் தொகுதி மற்ற சில காரணங்களுக்காகவும் அகில இந்திய அளவில் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

சண்டிகாரில் குல் பனாக்கிற்குப் போட்டியாக பாஜக சார்பாக களத்தில் குதித்திருக்கும் கிரண் கெர் (படம்) என்ற நடிகையும் வட இந்தியாவில் தொலைக்காட்சிகளிலும், இந்திப் படங்களிலும் பிரபலமானவர்.

Kiran Kher Anubam Kher 440 x 215(சண்டிகாரில் பாஜக வேட்பாளர் கிரண் கெர் – அவரது கணவர் அனுபம் கெர்)

ஷாருக்கானின் தேவதாஸ் இந்திப்படத்தில் ஐஸ்வர்யா ராயின் அம்மாவாக நடித்தவர். இந்திப்பட ரசிகர்கள் அவரை நிறைய இந்திப் படங்களில் அம்மா வேஷத்தில் பார்த்திருக்கலாம். இவரும் பாஜகவின் பலம் பொருந்திய வேட்பாளராகக் கருதப்படுகின்றார்.

புகழ் பெற்ற இந்தி மற்றும் ஆங்கிலப் பட நடிகர் அனுபம் கெர் என்பவரின் மனைவிதான் இந்த கிரண் கெர். அனுபம் கெர் நிறைய இந்திப் படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர்.

காங்கிரஸ் சார்பில் பவான் பன்சால்….

காங்கிரசும் தன் பங்கிற்கு பலம் பொருந்திய முன்னாள் ரயில்வே அமைச்சர் பவான் பன்சால் என்பவரை தனது வேட்பாளராக நிறுத்தியிருக்கிறது. இவர்தான் சண்டிகார் தொகுதியில் இப்போதைய நடப்பு நாடாளுமன்ற வேட்பாளர், அதுவும் கடந்த நான்கு தவணைகளாக இந்த தொகுதியைத் தற்காத்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொகுதியில் போட்டியிடும் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பிலான வேட்பாளரான ஜன்னத் ஜஹான் என்பவரும் ஒரு பெண்மணிதான். ஆக மூன்று பெண்கள் ஓர் ஆணுடன் மோதும் தொகுதியாக சண்டிகார் இந்தியாவின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Gul Panag (4) 440 x 215ஆனால், டில்லி சுற்று வட்டாரத்தில் மட்டும் பிரபலமான ஆம் ஆத்மி கட்சி டில்லியைத் தாண்டி சண்டிகாரிலும் முத்திரை பதிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சண்டிகாரில் தனது பிரபல்யத்தாலும், கவர்ச்சியாலும் அந்த தொகுதியை – ஆம் ஆத்மி கட்சிக்காக வென்று சாதனை படைக்க வேண்டிய அந்த மாபெரும் பொறுப்பு – இன்றைக்கு குல் பனாக்கின் கரங்களில்!

குல் பனாக் அந்த சாதனையை நிகழ்த்துவாரா?

ஏப்ரல் 10ஆம் தேதி சண்டிகாரில் நடைபெறும் தேர்தல் வாக்களிப்பு இதனை நிர்ணயம் செய்யும்!

-இரா.முத்தரசன்