நாமக்கல், ஏப்ரல் 8 -கலைஞர் 100 வயது வாழ வேண்டும், ஆனால் மக்களை ஏமாற்ற வேண்டாம். நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் எஸ்.கே. வேலுவை ஆதரித்து,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நேற்று பரமத்திவேலூர், திருச்செங்கோடு, ராசிபுரம் ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
திருச்செங்கோடு பழைய பேருந்துநிலையம் அண்ணா சிலை அருகே திறந்த வேனில் நின்றவாறு விஜயகாந்த் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது,
60 ஆண்டு காலமாக மத்தியில் காங்கிரஸ் கட்சியும் 40 ஆண்டு காலமாக தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளும் ஆட்சி செய்து வருகின்றன. அவர்கள் ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை.
ஒரு முறை மோடியை எனது நண்பர் என்றும், மறுமுறை அவரை தீய சக்தி என்றும் கலைஞர் கூறுகிறார். மேலும் இது எனக்கு கடைசி தேர்தல் என்று கூறி அனுதாப ஓட்டுக்களை பெற அவர் முயச்சி செய்கிறார். அவர் 100 வயது வாழ வேண்டும். ஆனால் மக்களை ஏமாற்ற வேண்டாம்.
செம்மொழி மாநாடு, ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் மறக்கவில்லை. திண்டுக்கல்லில் உள்ள வாக்காளர்கள் காசு, பிரியாணி, குவாட்டர் எங்களுக்கு வேண்டாம். குடிநீர் தான் வேண்டும் என்று கேட்கிறார்கள். இப்படிபட்ட அடிப்படை வசதிகள் கூட அங்கு இல்லை.
நீங்கள் போடும் கரும்புள்ளிகள், பெரும் புள்ளிகளாக மாறுகிறார்கள். எனவே நீங்கள் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.