சென்னை, ஏப்ரல் 8 – பாஜ அணியில் மாநிலத் தேர்தல் பிரச்சார செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நடிகர் எஸ்.வி.சேகர் அளித்த பேட்டியில், நான் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்கிறேன்.
ஏனெனில் பாஜ அணியில் பணம் தருகிறார்கள், பிரச்சாரம் செய்கிறேன். தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, இந்த தேர்தலில் மாநில கட்சிகள், தேசிய கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன.
ஆகையால் ஓட்டு சிதறுவதற்கு அதிகம் வாய்ப்பு இருக்கிறது. எனவே குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தான், வேட்பாளர்கள் ஜெயிக்க முடியும். பாஜ கூட்டணியில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறுவது உண்மையல்ல.
மேலும் அதிமுகவிலிருந்து நானாக வெளியேறவில்லை. தேர்தலில் செலவு கணக்கை சரியாக காட்டிய குற்றத்துக்காக வெளியேற்றப்பட்டேன்.
நான் அதிமுகவில் இருந்த வரையிலும் ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை. பாஜவுக்காக கடந்த 1991 முதல் 2004 வரை பிரச்சாரம் செய்து வந்துள்ளேன். தற்போது பாஜவுக்காக பிரச்சாரம் செய்ய ஒத்துக் கொள்ளும்போதே பிரச்சார தலைவர் பதவி வேண்டும் என்று கூறினேன்.
ஆனால் அவர்கள் செயலாளர் பதவி அளித்துள்ளனர். மேலும் நான் ஒன்றும் வேட்பாளரல்ல. பணம் தருகிறார்கள், பிரச்சாரம் செய்கிறேன் என எஸ்.வி.சேகர் கூறினார்.