Home இந்தியா கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 8: கிழக்கு டில்லியில் மகாத்மா காந்தி-ராஜாஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தி!

கவனிக்கப்படும் வேட்பாளர்கள் # 8: கிழக்கு டில்லியில் மகாத்மா காந்தி-ராஜாஜியின் பேரன் ராஜ்மோகன் காந்தி!

686
0
SHARE
Ad

Rajmohan1ஏப்ரல் 9 – சரித்திரம் தெரிந்தவர்களுக்கு மகாத்மா காந்தியின் மகன்களுள் ஒருவரான தேவதாஸ் காந்தி, நமது தமிழ் நாட்டின் மூதறிஞர் எனப் போற்றப்பட்ட ராஜாஜி அவர்களின் மகளைத் திருமணம் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.

#TamilSchoolmychoice

அவர்களுக்குப் பிறந்த ராஜ்மோகன் காந்திதான் இந்தப் பொதுத் தேர்தலில் கிழக்கு டில்லி நாடாளுமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிடுகின்றார்.

மகாத்மாவின் வாரிசு என்பதால், தாத்தாவின் பெருமையை நாடாளுமன்ற உறுப்பினராக நிலைநாட்டுவாரா என்ற மக்களின் எதிர்பார்ப்பு சேர்ந்து கொள்ள இன்றைக்கு இந்திய அளவில் கவனிக்கப்படும் வேட்பாளர்களில் அவரும் ஒருவராகியுள்ளார்.

தமிழ்ப் பரம்பரை ரத்த சம்பந்தமும் கொண்டவர் ராஜ்மோகன் காந்தி. அவரது தாய்வழித் தாத்தாவான சி.ராஜகோபாலாச்சாரி என்ற ராஜாஜி, தமிழ் நாட்டின் முதல்வராகவும், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும் இருந்தவர்.

காங்கிரஸ் கட்சி இன்றைக்கு இவ்வளவு பெரிய கட்சியாக உருவெடுத்து நிற்பதற்கும் – இந்தியாவில், இப்போது ஜனநாயகமான, சுதந்திரமான பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கும் காரணம் இந்தியாவின் தேசப்பிதா மகாத்மா காந்திதான்! அவர் தலைமை வகித்ததும் காங்கிரஸ் கட்சிக்குத்தான்!

ஆனால் அவரது பேரன் ராஜ்மோகன் காந்தி, இன்றைக்கு இருப்பதோ புதிதாக ஊழல் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு தோற்றுவிக்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சியில்.

கிழக்கு டில்லி நாடாளுமன்றத் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக நிறுத்தப்பட்டுள்ள, 78 வயதான ராஜ்மோகன் காந்தி சிறந்த கல்வித் தகுதிகளும், சமூக சேவை பின்னணிகளையும் கொண்டவர்.

அநேகமாக, இந்த பொதுத் தேர்தலில் மகாத்மா காந்தி பரம்பரையில் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்கும் ஒரே பிரமுகர் ராஜ் மோகன் காந்தியாகத்தான் இருக்க முடியும்.

அன்வார் இப்ராகிமிற்கு நெருக்கமான நண்பர்rajmohan-gandhi-book

மலேசியாவின் எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமிடமும் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டவர் ராஜ்மோகன். அன்வாரை அழைத்து இந்தியாவில் சில கருத்தரங்குகளில் கலந்து கொள்ளச் செய்தவர்.

அன்வார் இப்ராகிமும் மலேசியாவில் பல அரசியல் கூட்டங்களில் ராஜ்மோகன் காந்தியோடு பழகியதையும், கருத்தரங்குகளில் கலந்து கொண்டதையும் மிகவும் சிலாகித்து பேசியுள்ளார்.

அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள ராஜ்மோகன், ஊழல் ஒழிப்பு, மனித உரிமை போன்ற விவகாரங்களில் நீண்ட காலமாக போராடி வருபவர்.

பல நூல்களை எழுதியுள்ள சிறந்த சிந்தனைவாதியான இவர், கொஞ்ச காலம் சென்னையில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழில் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

தனது கொள்கைக்கு ஏற்ற கட்சியாக ஆம் ஆத்மி கட்சி உருவானதைத் தொடர்ந்து அந்தக் கட்சியில் இணைந்தார். இப்போது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில்!

இது அவருக்கு முதல் தேர்தலல்ல! 1989ஆம் ஆண்டில் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தியை எதிர்த்து நின்று தோல்வியைத் தழுவிய ராஜ்மோகன் காந்தி பின்னர், ராஜ்ய சபா எனப்படும் இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

rajmohan_statue_by-kevin-laddenகிழக்கு டில்லியில் வெல்வாரா?

இப்படியாக மிகச் சிறந்த பின்புலங்களைக் கொண்ட ராஜ்மோகன் காந்தி கிழக்கு டில்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் மகேஷ் கிரியையும், காங்கிரஸ் வேட்பாளர் சந்தீப் டிக்‌ஷிட்டையும் எதிர்த்து போட்டியில் குதித்துள்ளார்.

காங்கிரசின் சந்தீப் டிக்‌ஷிட்தான் கிழக்கு டில்லியின் தற்போதைய நடப்பு வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

டில்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு இருக்கும் மரியாதை, செல்வாக்கு மற்றும்  மகாத்மா காந்தியின் பேரன் என்ற பெருமை இவையெல்லாம் சேர்ந்து ராஜ்மோகன் காந்திக்கு இந்த பொதுத் தேர்தலில் வெற்றி மாலை கிட்டும் என்பது அரசியல் விமர்சகர்களின் கணிப்பு.

மகாத்மாவின் பெயரைப் பயன்படுத்தி வாக்கு சேகரிக்கின்றார் ராஜ்மோகன் என்றும் பிரச்சாரக் கூட்டங்களில் மகாத்மாவின் பேரன் என அறிமுகப்படுத்தப்படுகின்றார் என்றும் அவரை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏற்கனவே புகாரும் கூறியிருக்கின்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

இருப்பினும், ராஜ்மோகன் போன்ற கைசுத்தமான, சிறந்த பின்புலங்களைக் கொண்டவர்கள் இந்த முறை நாடாளுமன்றத்தில் வென்று வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியிலும், இந்திய அளவில் மக்களிடத்திலும் எப்போதும் இல்லாத அளவுக்கு பெருகியிருக்கின்றது.

ராஜ்மோகன் போட்டியிடும் கிழக்கு டில்லி நாடாளுமன்ற வாக்காளர்களும் அவ்வாறே சிந்தித்தால், ராஜ்மோகன் காந்தி நாடாளுமன்றத்தில் நுழைந்து தனது தாத்தாக்கள் மகாத்மா மற்றும் ராஜாஜியின் பெருமைகளை நிலைநாட்டுவார் என நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

-இரா.முத்தரசன்