புதுடில்லி, ஏப்ரல் 9 – முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984 – ம் ஆண்டு அக்டோபர் 31 – ம் தேதி தனது பாதுகாவலர்களான சத்வந்த் சிங் மற்றும் பியந்த் சிங் ஆகியோரால் அவரது வீட்டு தோட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து, நாடெங்கும் உள்ள சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
இச்சம்பவம் நிகழ்ந்து சுமார் 30 ஆண்டு கழித்த நிலையில் அமெரிக்காவில் உள்ள ‘சீக்கியர்களுக்கான நீதி’ என்ற மனித உரிமை அமைப்பினர், 1984 – ம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின் போது சீக்கியர்களுக்கு ஏற்பட்ட உயிர் மற்றும் உடைமை இழப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இழப்பீடு வழங்க வேண்டும் என அவர் மீது புரூக்ளினில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரணைக்கு வந்தபோது, புரூக்ளினில் உள்ள புற்று நோய் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக சோனியா வந்திருந்தார். அப்போது நீதிமன்றம் அவருக்கு அழைப்பாணை அனுப்பியது. அந்த ஆணையை ஏற்று அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றும் சீக்கிய அமைப்பு சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. ஆனால் சோனியா தரப்பில் இந்த சமயத்தில் அவர் அமெரிக்காவில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இதற்கு ஆதாரமாக பாஸ்போர்ட் நகலை ஏப்ரல் 7 -ம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு சோனியா காந்திக்கு புரூக்ளின் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. ஆனால் இதற்கு சோனியா மறுத்து விட்டார்.
இது குறித்து அவரது வக்கீல் ரவி பத்ரா கூறிகையில், “தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் நம்பத்தன்மை காரணமாக இதனை ஒப்படைக்க கூடாது என்று இந்திய அரசு கூறியிருப்பதால் அதை மீறி சோனியா காந்தியால் பாஸ்போர்ட் நகலை கொடுக்க இயலாது” என்று கூறியுள்ளார்.
பாஸ்போர்ட்டில் சோனியா எந்த நாளில் எங்கு இருந்தார் என்ற தகவல் இருக்கும் என்பதால் அதை நீதிமன்றம் ஆதாரமாக கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.