சென்னை, ஏப்ரல் 11 – மானமுள்ள தமிழர்கள் திருக்குறளை அவமதித்த மான்கராத்தே படத்தை விரட்டியடிக்க வேண்டும் என தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் செயலர் இராஜ்குமார் பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
தமிழ்த்திரைப்படங்களில் தமிழையும் தமிழர்களையும் அவமதிப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது. முன்பெல்லாம் தமிழர் அல்லாதவர்கள் தான் தமிழர்களையும் தமிழ் மொழியையும் அவமதித்து படம் எடுப்பார்கள்.
தற்போது சுயமரியாதை, மானம் இழந்த சமூகமாக மாறி வருகிறது என்பதற்கு இந்த திரைபடங்களே சான்று. அண்மையில் வெளியான மான் கராத்தே என்ற படத்திலும் தேவையில்லாமல் திருக்குறளை புகுத்தி நையாண்டி செய்துள்ளனர்.
கதாநாயகியை திருமணம் செய்ய வேண்டுமெனில் பத்து திருக்குறள் தெரிந்திருக்க வேண்டுமாம். இப்படி ஒரு போட்டி தமிழ் நாட்டில் வைப்பது தமிழர்களுக்கே அவமானம் இல்லையா?
அந்த பத்து திருக்குறள் கூட தெரியாமல் ஒரு பெரிய கூட்டமே நாயகியின் வீட்டின் முன்பு திருக்குறளை மனப்பாடம் செய்து கொண்டிருக்கின்றது.
திருக்குறள் போட்டியில் கலந்து கொள்ளும் ஒருவர் கீழ்க்கண்ட வாறு திருக்குறள் சொல்கிறார். “ஆட்டலில் சிறந்த ஆட்டல் மாவாட்டல், அவ்வாட்டல் ஓட்டலில் ஆட்டப்படும் ”. இப்படி யாரவது திருக்குறள் சொல்வார்களா ?
இது திருக்குறளை திட்டமிட்டு அவமதிக்கும் செயல். இப்படியான காட்சிக்கு கண்டனம் தெரிவிக்காமல் நம் தமிழ் சமூகம் திரையரங்கில் சிரித்துக் கொண்டு வெளியே வருவது வேதனையளிக்கிறது என வருத்தத்துடன் தமிழர் பண்பாட்டு நடுவம் கண்டனம் தெரிவித்துள்ளது.