கோலாலம்பூர், ஏப்ரல் 12- தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட 56 கோடி ரிங்கிட் நிதியில், 37 கோடியே 58 லட்சம் செலவிற்கான மேம்பாட்டு குழுவின் கணக்கு அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து 2011 ஆம் ஆண்டு வரை நாட்டிலுள்ள 258 தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு 34 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாகவும் சுப்ரா தெரிவித்தார்.
அதோடு, 184 தமிழ்ப் பள்ளிகளின் சிறிய அளவிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு 1 கோடியே 58 லட்சம் வெள்ளியும், கடந்த 2013 ஆம் ஆண்டு 13 தமிழ்ப் பள்ளிகளுக்கு 2 கோடி வெள்ளியும் மானியமாக வழங்கப்பட்டுள்ளதாகவும் சுப்ரா தெரிவித்தார்.
இதனிடையே, மேம்பாட்டுத் திட்டங்களுக்காக மானியம் வழங்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல் கடந்த தேர்தலில் பிரதமர் துறையின் கீழ் நம்பிக்கை என்ற தலைப்பில் புத்தக வடிவில் முழுவிவரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலை பெற வேண்டும் என்றால் தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுக் குழுவை தொடர்பு கொள்ளலாம் என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.