ஏப்ரல் 12 – கடந்த பிப்ரவரி 8-ஆம் தேதி கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் சென்ற மாஸ் MH370 விமானம் மாயமாய் மறைந்து போனதைத் தொடர்ந்து தீவிர தேடும் பணி நடைபெற்று வருகின்றது.
இவ்வேளையில், விமானம் ஆப்கனுக்கு கடத்தப்பட்டு தனி தனி பாகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது எனவும், இதில் பயணம் செய்த 239 பயணிகளும் பிணையக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் எனவும் ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளன.
கடலுக்கு அடியில் புதிய சமிக்ஞைகள் கிடைத்த இடத்தைக் குறி வைத்து ஆஸ்திரேலிய மீட்புப் படையினர் தேடுதல் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஏறக்குறைய அந்த இடத்தை நெருங்கிவிட்டதாக நேற்று முன்தினம் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், விமானம் கடத்தப்பட்டதாக ரஷ்ய உளவுத் துறை வெளியிட்டுள்ள இந்த தகவல் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய உளவுத் துறை வட்டாரங்கள் டெய்லி ஸ்டார் என்ற பத்திரிகையில் கூறியிருப்பதாவது,
“மலேசிய விமானம் தீவிரவாதிகளால் திசை திருப்பப்பட்டு ஆப்கானிஸ்தானுக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளது. பாகிஸ்தான் எல்லையோரம் ஆப்கானிஸ்தான் பகுதியில் மலை பகுதிகள் நிறைந்த இடத்தில் விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. அங்கு விமானத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. பயணிகள் அனைவரையும் 7 குழுக்களாக பிரித்து வேறு வேறு இடங்களில் அடைத்து வைத்துள்ளனர்.”
“மண் குடிசைகளில் எந்த தொலைதொடர்பு வசதியும் இல்லாத இடத்தில் பயணிகளை தீவிரவாதிகள் அடைத்து வைத்துள்ளனர். அவர்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.மேலும் விமானத்தில் சென்றவர்களில் ஆசிய நாடுகளை சேர்ந்த பல்துறை நிபுணர்கள் 20 பேரை பாகிஸ்தான் எல்லையில் உள்ள பதுங்கு குழிகளில் தீவிரவாதிகள் பிணைக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.
பயணிகள் அனைவரும் உயிருடன் இருப்பதாக ரஷ்ய உளவு துறை கூறியிருப்பது தற்போது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.