ஏப்ரல் 14 – சீனாவின் கடலோரப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 கப்பல்கள் எவ்வித அனுமதியும் இன்றி தங்கள் நாட்டின் கடல் எல்லையில் பயணித்ததாக ஜப்பான் கடலோரப் பாதுகாப்புப்படை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கிழக்கு சீனக் கடற்பரப்பில் உள்ள ஜப்பானின் சென்காகஸ் கடற்பகுதியில் 12 கடல் மைல் தொலைவில் அந்நாட்டின் 3 கப்பல்கள் சனிக்கிழமை காலை 9 மணி அளவில் ஏறக்குறைய 2 மணி நேரம் பயணம் செய்ததாக கடற்படை அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த 2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த தீவுகளை ஜப்பான் தனது ஆதிக்கத்தின் கீழ் அதிகாரப்பூர்வமாக கொண்டுவந்ததில் இருந்து சீனா இதுபோன்ற சம்பவங்களில் அடிக்கடி ஈடுபட்டு வருகிறது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்குச் சீன கடற்பகுதி வான் எல்லையை தன்னிச்சையாக தங்கள் நாட்டு எல்லை என்று சீனா வரையறுத்துக் கொண்டது.
மேலும், அந்த வான் எல்லைக்குள் அடிக்கடி தனது போர் விமானங்களை ஊடுருவச் செய்து பயிற்சியை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் நிலவியது.
சீனாவின் இந்த நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா, சீனா வான் எல்லையில் குழப்பம் ஏற்படுத்துகிறது என பகிரங்கமாக குற்றம் சாட்டியது.
இதனிடையே, அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் சக் ஹேகல், ஜப்பானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் இட்சுனோரி ஓனோடேராவிடம் கடந்த வாரம் இதுகுறித்து பேசியதாவது,
“ஜப்பான் மற்றும் ஆசிய நாடுகளின் மீதான சீனாவின் தன்னிச்சையான நடவடிக்கைக்கு தீர்வு காண வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், சீனாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் கூறுகையில், “கிழக்கு சீனக் கடற்பரப்பில் உள்ள தீவுகள் விவகாரத்தில் அண்டை நாடுகளுடன் பிரச்னைகளை உண்டாக்கும் விதமாக, எத்தகைய நடவடிக்கையிலும் சீனா ஈடுபடாது” என்றார்.