ஈப்போ, ஏப்ரல் 14- இஸ்லாத்திற்கு மதம் மாறிவிட்ட தமது முன்னாள் கணவர் தமது குழந்தையை தம்மிடமிருந்து பறித்துச் சென்றது குறித்து இந்து தாயார் தீபா செய்துள்ள புகார் மீது போலீஸ் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு நியாயம் கற்பித்திருக்கும் மலேசியக் காவல் துறைத் தலைவர் (ஐஜிபி) டான்ஸ்ரீ காலிட் அபு பக்காரின் அறிக்கையை கடுமையாக கண்டித்திருக்கும் ஈப்போ பாராட் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன் (படம்) காலிட் தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரு நீதிமன்றங்கள் இரு பெற்றோருக்கும் குழந்தையை பராமரிக்கும் பொறுப்பை அளித்துள்ளதுதான் போலீஸ் இப்புகார் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காததற்கு காரணம் என்று காலிட் வாதித்துள்ளார்.
ஆனால், சுற்றுலாத்துறை அமைச்சர் நஸ்ரி சரியாக சுட்டி காட்டியுள்ளது போல் பாதிப்புக்குள்ளான தீபா போலீசில் புகார் செய்துள்ள இச்சம்பவம் பொது (சிவில்) சட்டத்தின் கீழ் ஒரு தெள்ளத் தெளிவான கடத்தல் சம்பந்தப்பட்டதாகும் – குற்றமாகும் என்பதை குலசேகரன் சுட்டிக்காட்டினார்.
ஆகவே, பிள்ளையைத் தூக்கிச் சென்ற கணவர் மீது ஐஜிபி நடவடிக்கை எடுக்கக் கடமைப்பட்டுள்ளார் என்றும் இந்த விவகாரத்தை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால் அவர் நஸ்ரியிடமிருந்து ஆலோசனை பெற வேண்டும் என்றும் குலசேகரன் குறிப்பிட்டார்.
அவர் தமது கடமையை ஆற்றத் தயாராக இல்லை என்றால் சட்டத்தை அமலாக்கம் செய்பவர் என்ற அவரது பணியை கைவிட்டவர் என்று கருதப்படுவார். அத்தகைய சூழ்நிலையில் அவர் போலீஸ் படையின் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் குலசேகரன் காட்டமாகக் கூறியுள்ளார்.