துபாய், ஏப்ரல் 15 – அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள உலக பசுமை பொருளாதார உச்சநிலை மாநாடு இன்று தொடங்குகிறது.
மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில்’குளோபல் பார்ட்னர்ஷிப் அன்ட் சஸ்டயினபிள் பியூச்சர்’ (Global Partnerships and Sustainable Future) என்ற தலைப்பில் நடைபெறும் முதல் பசுமை உச்சி மாநாடு இதுவாகும்.
துபாயின் ஆட்சியாளர் ஹெச்ஹெச் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் முயற்சியினால் இந்த மாநாடு நடைபெற உள்ளது. துபாயின் மின்சாரம் மற்றும் நீர் ஆணைய அமைப்புகள், உலக காலநிலை அமைப்புடன் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
இந்த மாநாட்டின் செயல்பாடுகள் ஐக்கிய அரபுக் குடியரசில் ஒரு நிலையான பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க இது ஒரு நீடித்த முயற்சியாக இருக்கும் என்று கருதப்படுகின்றது. இது குறித்து மின்சாரம் மற்றும் நீர் ஆணைய அமைப்பின் முக்கிய நிர்வாக அதிகாரியான சயீத் முகமத் அல் தயர் கூறுகையில்,
“ஐக்கிய அரபுக் குடியரசில் முதலீடுகள், கூட்டுறவுகள், பசுமைத் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் சேவைகளை உள்ளடங்கிய உலகசந்தையை உருவாக்குதல் போன்ற செயல்பாடுகளின் மூலம் பசுமைப் பொருளாதாரத்தை உருவாக்க இந்த மாநாடு முக்கிய பங்கு வகிக்கும்” என்று கூறியுள்ளார்.
துபாயின் சர்வதேச மற்றும் கண்காட்சி மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கூட்டு முயற்சிகளை மேற்கொள்ளுவதன் மூலம் பசுமைப் பொருளாதாரத்திற்கான மாற்றங்கள் துரிதப்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.