Home India Elections 2014 செல்லியல் தேர்தல் பார்வை # 2 : 100 மில்லியன் புதிய வாக்காளர்கள் இந்தியத் தேர்தல்...

செல்லியல் தேர்தல் பார்வை # 2 : 100 மில்லியன் புதிய வாக்காளர்கள் இந்தியத் தேர்தல் முடிவை நிர்ணயிப்பார்களா?

638
0
SHARE
Ad

Rahul - Modi 440 x 215ஏப்ரல் 16 – கட்டம் கட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியப் பொதுத் தேர்தலின் முடிவுகளை  நிர்ணயிக்கப் போவது வாக்காளர் பட்டியலில் புதிதாக இணைந்துள்ள 100 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள்தான் என அரசியல் கணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

இந்த முறை இந்தியப் பொதுத் தேர்தலில் 120 மில்லியன் வாக்காளர்கள் முதல் முறையாக வாக்களிப்பவர்களாக இருக்கின்றார்கள்.

இவர்களில் பெரும்பாலோர் இளைஞர்களாகவும், இளம் பெண்களாகவும் இருக்கின்றனர் என்பது மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சம்.

தற்போது இந்தியாவில் கல்வி விகிதாச்சாரம் வெகுவாக முன்னேறியிருப்பதால், இந்த புதிய வாக்காளர்களில் பெரும்பாலோர் நன்கு கல்வி கற்றவர்களாக – நடப்பு அரசியல் தெரிந்தவர்களாக இருக்கின்றனர்.

வழக்கம்போல் ஜாதி, மதம், சார்ந்திருக்கும் கட்சி போன்ற நோக்கங்களோடு வாக்களிக்காமல், தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கட்சி எது – நாட்டிற்கு வளர்ச்சியைக் கொண்டு வரும் கட்சி எது – வேட்பாளர் யார் என்பது போன்ற அம்சங்களை முன்னிருத்தி இந்த புதிய வாக்காளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதனால், மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி போன்ற அம்சங்களை முன்னிருத்தி பிரச்சாரம் செய்து வரும் நரேந்திர மோடியால் இந்த இளைய சமுதாய வாக்காளர்களைப் பெருமளவில் கவர முடியும் என பாரதீய ஜனதா கட்சி கருதுகின்றது.

அரசியல் வல்லுநர்களின் கணிப்பும் அதுதான்!

இந்த புதிய வாக்காளர்கள்தான் இந்த முறை இந்தியத் தேர்தலின் முடிவுகளின் திசையை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியாகத் திகழப் போகின்றார்கள்.

ராகுல் காந்தி கவர்கின்றாரா?

Rahul-Gandhi_22காங்கிரசின் முன்னணி தலைவராக முன் நிறுத்தப்பட்டுள்ள ராகுல் காந்தி இளைஞராக இருந்தாலும், கவர்ச்சியான தோற்றமுடையவராகவும் இருந்தாலும், இன்னும் திருமணம் ஆகாதவராக இருந்தாலும், ஏனோ அவரால் இளைய சமுதாய வாக்காளர்களைக் கவர முடியவில்லை.

ஆனால், தலை முழுவதும் நரைத்த தலைமுடியுடனும், வெண் தாடியுடனும் உலா வரும் 63 வயது நரேந்திர மோடி தனது சுறுசுறுப்பாலும், ஆக்ரோஷமான, உறுதியான உரைகளாலும், இளைய சமுதாயத்தினரிடையே பெரும் ஆதரவைப் பெற்று வருகின்றார்.

பிரியங்கா காந்தியின் வரவு தேர்தல் கணக்கை மாற்றுமா?

Priyanka Gandhi 440 x 215இதுவரையில் காங்கிரசுக்கு பாதகமான முறையில் சென்று கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் பிரச்சாரத்தில் தற்போது சோனியா காந்தியின் மூத்த புதல்வி பிரியங்கா காந்தி நேரடியாக உள்ளே நுழைந்திருக்கின்றார்.

ராகுலை விட பிரியங்கா மீது இந்திய வாக்காளர்களில் பலர் மதிப்பும் மரியாதையும், அபிமானமும் வைத்திருக்கின்றனர்.

பாட்டி இந்திரா காந்தி போன்ற தோற்றமும், கம்பீரமும் கொண்ட பிரியங்காவின் மற்ற நடை உடை பாவனைகளும் அச்சு அசலாக அவரது பாட்டியை நினைவுபடுத்துவதாக இருக்கின்றது என்பதுதான் அவர் பெற்றுள்ள செல்வாக்குக்கான காரணம்.

ஆனால்,  அவர் இதுவரை நேரடி அரசியலில் இறங்கவில்லை.

இந்த முறை தனது சகோதரர் ராகுலின் வேட்பு மனுத்தாக்கலின் போது உடன் இருந்தவர், தொடர்ந்து தனது தந்தையின் தம்பி சஞ்சய் காந்தியின் மைந்தன் வருண் காந்தியை சாடியதன் மூலம் வாக்காளர்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியிருக்கின்றார்.

ஆனால் இந்திய தொலைக்காட்சிகள் நடத்திய ஆய்வில், இந்த இந்திரா காந்தி குடும்பத்து தனிப்பட்ட சண்டைகள் பல்லாண்டுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஒன்று என்றும் இதனால் புதிய வாக்காளர்களோ, மற்ற வாக்காளர்களோ மனம் மாறப் போவதில்லை என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதே சமயம், பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கோ நாடு முழுமையிலும் நல்ல பெயர் இல்லை. நில பேர ஊழல்கள்  மற்றும் சில ஊழல் விவகாரங்களால் தனது நற்பெயரைக் கெடுத்துக் கொண்டுள்ள ராபர்ட் வதேராவினால், பிரியங்காவின் மதிப்பும் சற்று மங்கி விட்டது என்றே கூற வேண்டும்.

ஆம் ஆத்மி கட்சியின் வெற்றி சொல்லும் பாடம்….

Arvind Kejriwalஇந்த பொதுத் தேர்தலில் தனிமனித செல்வாக்கோ, பிரபல்யமோ, பின்புலமோ, கட்சி மோகமோ – எதுவுமே புதிய வாக்காளர்களைக் கவராது.

மாறாக, இந்த முறை வாக்குச் சாவடிகளை நோக்கிச் செல்லும் புதிய வாக்காளர்களின் மனங்களில் – இளைய சமுதாய வாக்காளர்களின் எண்ணங்களில் – ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதே முதல் நோக்கமாக இருக்கின்றது.

இதனை மறு உறுதி செய்வது போல் அமைந்தது – நன்கு படித்த மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட டில்லி சட்டமன்றத் தேர்தல்களில் ஊழலற்ற ஆட்சி என்ற தாரக மந்திரத்தோடு களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சியின் அண்மையக் கால தேர்தல் வெற்றிகள்!

புதிய வாக்காளர்களாக, முதல் முறையாக வாக்களிக்கப்போகும் இளம் வாக்காளர்களின் சிந்தனா போக்கு, மன ஓட்டம் எல்லாமும் சேர்ந்துதான் இந்தியத் தேர்தலின் தலைவிதியை இந்த முறை நிர்ணயிக்கப் போகின்றன.

2014 பொதுத் தேர்தலில் இதுவரை நடந்த வாக்களிப்புகளில் அதிக அளவிலான விகிதாச்சாரத்தில் வாக்காளர்கள் திரண்டு வந்து வாக்களித்திருப்பது புதிய வாக்காளர்களின் ஆர்வத்தையும், ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற மக்களின் வேட்கையையும் எடுத்துக் காட்டுவதாகவே இருக்கின்றது என அரசியல் பார்வையாளர்களும் கணித்துள்ளனர்.

-இரா.முத்தரசன்