சென்னை, ஏப்ரல் 16 – திருநங்கைகளை 3-ஆம் பாலினமாக உச்சநீதிமன்றம் அறிவித்ததை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
2006-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, திமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், அனைத்து சமுதாயத்தினராலும், ஒதுக்கப்பட்ட நிலையில் உள்ள திருநங்கைகளின் நலன்களைப் பாதுகாக்கத் தக்க வகையில்,
அவர்களின் பல்வேறு கோரிக்கைகளை முறைப்படி பரிசீலித்து முடிவுகள் மேற்கொள்வோம் என்று தெரிவித்திருந்தோம்.
மேலும், கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, திருநங்கைகளை 3-ஆம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை திமுக வலியுறுத்தும் என்றும் தெரிவித்திருந்தோம்.
தற்போது, திருநங்கைகளின் நல்வாழ்வுக்காக பல ஆண்டுக் காலமாக குரல் கொடுத்த திமுகவிற்கு இந்தத் தீர்ப்பு பெரிதும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதியரசர்கள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், ஏ.கே. சிக்ரி ஆகியோருக்கும்,
இந்த வழக்கைத் தொடுத்த லட்சுமிநாராயணன் திரிபாதிக்கும் நம் இதயமார்ந்த நன்றியைத் தெரிவிப்பதோடு, இந்த முடிவினை திமுக சார்பில் பெரிதும் வரவேற்று, பாராட்டுகிறேன் என கருணாநிதி கூறியுள்ளார்.