கோலாலம்பூர், ஏப்ரல் 16 – செம்பூர்ணாவில் கடத்தப்பட்ட சீன சுற்றுலாப் பயணி இன்னும் உயிருடன் தான் உள்ளார் என்பதை கடத்தல்காரர்கள் அனுப்பிய அவரது புகைப்படத்தை வைத்து காவல்துறை முடிவுக்கு வந்துள்ளனர்.
இது குறித்து சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஹம்ஸா தாயிப் (படம்), தனது கடத்தல்காரர்களிடம் இருந்து கிடைத்த சீன சுற்றுலாப் பயணி காவ் ஹுயயுனின் புகைப்படத்தை வைத்து இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
எனினும், அந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்ற தகவலைக் கூற அவர் மறுத்துவிட்டார்.
கடந்த ஏப்ரல் 2 -ம் தேதி, செம்பூர்ணா சிங்கமாட்டா ரீஃப் ஓய்வகத்தில் புகுந்த ஆயுந்தமேந்திய கும்பல், அங்கிருந்த சீன சுற்றுலாப் பயணி காவ் (வயது 29) மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஓய்வக ஊழியர் மெர்சி தயவான் (வயது 40) ஆகிய இருவரையும் கடத்திச் சென்றது.
அதன் பின்னர், அவர்கள் இருவரையும் விடுவிக்க 36.4 மில்லியன் பணம் கேட்டு அரசாங்கத்திற்கு கடத்தல்காரர்களிடமிருந்து கோரிக்கை வந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அகமட் சாஹித் ஹமீடி கடந்த வாரம் அறிவித்தார்.