கோத்தா கினபாலு, ஏப்ரல் 5 – சபாவின் செம்பூர்ணா பகுதியில் இருந்து கடந்த புதன்கிழமை கடத்திச் செல்லப்பட்ட இரண்டு பெண்களும் தென் பிலிப்பைன்ஸ் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.
ஏழு துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்களால் கடத்திச் செல்லப்பட்ட, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த அந்த இரண்டு பெண்களும் கடல் பகுதி வழியாக தென் பிலிப்பைன்ஸ் தீவு ஒன்றிற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றார்கள் என்றும், மலேசியக் காவல் துறையின் கண்களில் இருந்து தப்பிச் செல்ல கடத்தல்காரர்கள் இந்த வழிமுறையைத் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் சபா காவல் துறை தலைவர் டத்தோ ஹம்சா தாயிப் தெரிவித்துள்ளார்.
அந்தப் பெண்கள் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை காவல் துறை அறிந்துள்ளதாகவும், ஆனால், நடந்து கொண்டிருக்கும் விசாரணைகளுக்கு பாதிப்பு வரும் என்ற காரணத்தால் அந்த இடம் குறித்த தகவலைத் தற்போது வெளியிட முடியாது என்றும் ஹம்சா கூறியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக செம்பூர்ணாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று பெண்களையும் ஓர் ஆடவரையும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். எந்த அடையாள ஆவணங்களும் இல்லாத அவர்களை விசாரிப்பதன் மூலம் இந்த விவகாரத்தில் விளக்கங்கள் பெற முடியும் என காவல் துறை நம்புவதாகவும் ஹம்சா தெரிவித்துள்ளார்.
கடந்த புதன்கிழமை இரவு 10.30 மணியளவில், செம்பூர்ணாவில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சிங்கமாத்தா ஓய்வகத்திலிருந்து துப்பாக்கி ஏந்திய கடத்தல்காரர்கள், 40 வயதான பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஓய்வகப் பணியாளரையும், 29 வயதான சீன நாட்டு சுற்றுப் பயணி ஒருவரையும் கடத்திச் சென்றனர்.