சிட்னி, ஏப்ரல் 16 – பூமியில் ஏற்படும் பருவநிலை மாற்றத்தின் காரணமாக மனித சமுதாயமும், உயிரியல் மண்டலமும் பல்வேறு எதிர் விளைவுகளை சந்தித்து வருகின்றது. தற்போது மனிதகுலத்தை அதிர்ச்சியடைய வைக்கும் செய்தியாக புதிய ஆராய்ச்சிக் குறிப்பு வெளியாகியுள்ளது.
அதில் கடல்நீர் ‘அமிலத்தன்மை’ (Acidic) ஆக மாறி வருவதாகத் தெரிய வந்துள்ளது. பசிபிக் கடலில் பப்புவா நியூகினியாவில் ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் குக் பல்கலைக்கழக பேராசிரியர் பிலிப் முன்டே தலைமையிலான குழுவினர் பவளப் பாறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, பருவநிலை மாற்றம் காரணமாக வான்வெளி மண்டலம் 30% அளவுக்கு கார்பன்டை ஆக்சைடை (Co2) வெளியிடுகிறது. அவற்றை உள்வாங்கும் கடல்நீர், நச்சுத்தன்மை பொருந்திய அமிலமாக மாறி வருவதாக கண்டுபிடித்துள்ளனர்.
இந்த மாற்றம் கடல் பகுதியிலும், உயிரியல் மண்டலத்திலும் மிகப்பெரிய எதிர் விளைவை ஏற்படுத்தும் எனத் தெரியவருகின்றது. பவளப்பாறைகள் சேதமடைந்து மீன்களும், கடல் வாழ் உயிரினங்களும் அழியும் ஆபத்து உருவாகியுள்ளது.
மேலும், கடல்நீர் அமிலத்தன்மையாக மாறி வருவதால் மீன்களின் எதிரிகள் அவற்றை சுலபமாக மோப்பம் பிடித்து வேட்டையாடி அழித்து வருகின்றன. இதனால், மீன் இனம் மெல்ல அழிந்து வருகிறது என பேராசிரியர் பிலிப் முன்டே தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் மனித நாகரீகம் நவீனத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்க, மறுபுறம் இயற்கையின் வலிமை குறைந்து கொண்டே வருவது பட்டவர்தனமான உண்மை.