கோலாலம்பூர், ஏப்ரல் 16 – மாயமான மாஸ் விமானம் கடலில் விழுந்து நொறுங்கிய இடத்தை ஆஸ்திலேய மீட்புப் படை சரியாக நெருங்கிவிட்டதாகவும், மிக விரைவில் விமானத்தின் பாகங்கள் கிடைத்துவிடும் என்றும் சிட்னி மார்னிங் ஹெரால்ட் என்ற ஆஸ்திரேலிய பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
விமானத்தின் கறுப்புப் பெட்டியிலிருந்து கிடைத்த 4 தெளிவான சமிக்ஞைகளை கடந்த வாரம் கண்டறிந்ததன் மூலம் விமானம் விழுந்த பகுதியை சரியாக மீட்புப் படையினர் கண்டறிந்துவிட்டதாகவும் புளூ வாட்டர் ரிகவர்ஸ் இயக்குநர் டேவிட் மியர்ன்ஸ் இன்று ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் கூறியுள்ளார்.
“அவர்கள் சரியாக விமானத்தின் பாகங்கள் கிடக்கும் இடத்தை அடைந்துவிட்டார்கள்” என்று மியர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
விமானத்தின் பாகங்களை கடலுக்கு அடியில் தேடும் புளூபின் உபகரணங்கள் படம் பிடித்து வரும் வரை அதிகாரப்புர்வமாக எதையும் அறிவிக்க ஆஸ்திரேல அரசாங்கம் தயங்கி வருவதாகவும் மியர்ன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கரான மியர்ன்ஸ், இரண்டாம் உலகப் போரின் போது இந்திய பெருங்கடலில் விழுந்த HMAS சிட்னி விமானத்தின் பாகங்களை 66 ஆண்டுகளுக்குப் பின்னர் கண்டறிந்ததற்காக, கடந்த 2008 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கத்திடம் விருது வாங்கியவர்.
மேலும், அட்லாண்டிக் பெருங்கடலில் கடந்த 2011 -ம் ஆண்டு விழுந்த ஏர் பிரான்ஸ் விமானத்தைக் கண்டுபிடிக்கவும் உதவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.