ஏப்ரல் 18 – பெரும் எதிர்பார்ப்பை எழுப்பியிருக்கும் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ‘தெனாலிராமன்’ திரைப்படம் இன்று தமிழகத்திலும் மற்ற உலக நாடுகளிலும் திரையீடு காண்கின்றது.
தெலுங்கு அமைப்புகளுடன் நடத்தப்பட்ட சமரசப் பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததால் திட்டமிட்டபடி வடிவேலுவின் தெனாலிராமன் படம் இன்று வெள்ளிக்கிழமை ஏப்ரல் 18ஆம் தேதி திரைக்கு வருகிறது.
இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளிவரும் படம் தெனாலிராமன்.
ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்க யுவராஜ் தயாளன் இயக்கும் இந்தப் படத்தின் வெளியீடு தேதி அறிவிக்கப்பட்ட பின் தெலுங்கு அமைப்புகள் படத்துக்குஎதிராக போராட்டத்தில் இறங்கின.
கிருஷ்ணதேவராயரையும், தெனாலிராமனையும்இழிவு படுத்தி காட்சிகள் வைத்துள்ளனர். படம் வெளியானால் அது தெலுங்குபேசும் மக்களை வேதனைப்படுத்தும் என்று கூறி படத்தை தடை செய்ய மனுஅளித்தனர். வழக்கும் தொடரப்பட்டது. மேலும், வடிவேலுவின் வீட்டைமுற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முயன்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் வடிவேலு கதாநாயகனாக நகைச்சுவை நடிப்பில் கலக்கவிருக்கும் தெனாலிராமன் படம் அவருக்கு சினிமாவில் மறுவாழ்வைத் தருமா அல்லது அவருக்குத் தோல்வியைத் தந்து நிரந்தரமாக வீட்டிலேயே தங்க வைக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள தமிழகத் திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கின்றது.