ஆரணி, ஏப்ரல் 18 – அரசு ஏற்று செய்ய வேண்டிய கல்வியை தனியாருக்கு விட்டுவிட்டு, தனியார் செய்ய வேண்டிய மதுபான விற்பனையை அரசு ஏற்று நடத்துவதுதான் நம் நாட்டில் மகத்தான சாதனையாக உள்ளது என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
ஆரணி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளர் ஏ.கே.மூர்த்தியை ஆதரித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நடுகுப்பம் கிராமத்தில் நேற்று பிரச்சாரம் தொடங்கினார்.
தொடர்ந்து ஆரணி சைதாப்பேட்டை, ஆரணிபாளையம், அருணகிரி சத்திரம், வடுகசாத்து, அரியபாடி ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது,
கடந்த 36 மாத கால ஜெயலலிதா ஆட்சியில் பயனுள்ள எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. மது (டாஸ்மாக்) கடைகள் மூலமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ.23 ஆயிரம் கோடிக்கு விற்பனை அதிகரித்தது தான் சாதனையாக உள்ளது.
ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது என்று கூறிவிட்டு தினமும் 6 மணிக்கு மின்சாரம் தடை (கட்) என்று சொல்வது வாடிக்கையாகி விட்டது. மின்சார வெட்டு ஒவ்வொரு மூன்று மாதத்திற்குள் சரிசெய்து விடுவேன் என்று கூறியதுதான் மிச்சம்.
மின்வெட்டுக்கு காரணம் மின்சார ஊழியர்களின் சதியே என்று அதிகாரிகள் மீதும் ஊழியர்களின் மீதும் பழி போடுவது ஜெயலலிதாவுக்கு ஒன்றும் புதியதல்ல.
1991–1996 ஆண்டுகளில் நடந்த ஜெயலலிதா ஆட்சியில் தரமற்ற மின்சார எந்திரம் மற்றும் நிலக்கரி வாங்கியதால் தான் அடிக்கடி பழுது ஏற்பட்டு மின் உற்பத்தி பாதிக்கிறதே தவிர இதில் எந்தவித சதியும் இல்லை என்பதே என்னுடைய கருத்து ராமதாஸ் பேசினார்.