சென்னை, ஏப்ரல் 18 – சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, பட்டாசு தயாரிப்பில் பொட்டாசியம் குளோரைடு பயன்படுத்துவதற்கு இந்தியாவில் ஏற்கனவே தடை உள்ளது.
ஆனால் சீன பட்டாசுகளில் அதிக அளவில் பொட்டாசியம் குளோரைடை தான் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் ஆபத்துகள் ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். இந்தியாவில் அதிகளவில் பட்டாசு தொழில் நடைபெறும் மாநிலம் தமிழகம்.
அதிலும் குறிப்பாக சிவகாசி, கோவில்பட்டி ஆகிய பகுதிகளில் அதிகளவு பட்டாசு தொழில் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது குறுக்கு வழியில் இந்தியாவிற்குள் கொண்டுவரப்படும் சீன பட்டாசுகளால், சிவகாசியில் பட்டாசு தொழில் பாதிப்படைந்துள்ளது.
மேலும் இத்தொழிலை நம்பி பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்துள்ள சிறிய, பெரிய தொழில் அதிபர்களும் மிகப் பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும். எனவே சீன பட்டாசுகளால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து, சீன பட்டாசுகள் இறக்குமதியாவதை மத்திய அரசு அனைத்து வழிகளிலும் தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் உயர்த்தப்பட்டுள்ள ஆண்டு உரிம கட்டணங்களையும், புதிய கெடுபிடிகளையும் மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும். உடனடியாக சீன பட்டாசு இறக்குமதியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.