டமாஸ்கஸ், ஏப்ரல் 22 – உள்நாட்டு கரவரம், எதிர் கட்சியினரின் கிளர்ச்சி ஆகியவற்றின் விளைவாக சிரியா நாட்டில் அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் இதுவரை ஆட்சி செய்து வந்த அதிபர் பஷர் அல் ஆசாத் தலைமையிலான அரசாங்கத்திற்கு தற்போது கடும் நெருக்கடி நிலவி வருகின்றது.
கடந்த 4 ஆண்டுகளாக ஆசாத் அரசாங்கத்தை எதிர்த்து கடும் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்த எதிர்கட்சியினரை சிரியா இராணுவம் ஒடுக்கி வருகின்றது.
இந்நிலையில் நிலைமையை சரி செய்ய அதிபர் ஆசாத்தை பதவி விலகுமாறு அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகள் கேட்டுக் கொண்ட பின்னரும் ஆசாத் பதவி விலகாத காரணத்தால் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆயுத உதவி செய்து வருகின்றது.இதனால், அங்கு உள்நாட்டு சண்டை தொடர்கிறது. இதுவரை, 1.5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 8 லட்சம் பேர், அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ரசாயன ஆயுதம் பயன்படுத்தியதாக, சிரியா அரசு மீது கடந்த ஆண்டு புகார் எழுந்ததால், அந்நாட்டின் மீது, ‘நேட்டோ’ எனப்படும், அமெரிக்க ஆதரவு நாடுகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டன. ஆனால், ரஷ்யா அதிபர் புடின், சிரியா அதிபர் ஆசாத்தின் நண்பர் என்பதால், இந்த விவகாரத்தில் சமாதானம் செய்து, ரசாயன ஆயுதங்களை அழிக்க உடன்பாட்டை ஏற்படுத்தினார்.
இதனால், சிரியா மீதான தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரும் ஜூன் மாதம் 3 ம் தேதி சிரியாவில் அதிபர் தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனு தாக்கல், இம்மாதம் 22 முதல் துவங்குவதாகவும், சிரியா நாடாளுமன்ற சபாநாயகர், முகமது லகாம் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பை தொடர்ந்து, மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகியுள்ளார் அதிபர் ஆசாத் என்பது குறிப்பிடத்தக்கது.